காவிரியில் சீறிப் பாய்ந்து வரும் 2.4 லட்சம் கனஅடி நீர் மேட்டூர் அணை ஒரே வாரத்தில் நிரம்ப வாய்ப்பு
கர்நாடகாவில் கொட்டித் தீர்க்கும் கன மழையால் அந்த மாநிலத்தில் கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் நிரம்பி வழிகின்றன. கே.ஆர் எஸ்.அணையும் நிரம்பும் நிலையில் உள்ளதால் காவிரியில் தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 2.4 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கட்டுக்கடங்காத வெள்ளமாக தமிழகத்திற்கு சீறிப் பாய்ந்து வரும் இந்த நீரால் மேட்டூர் அணை ஒரே வாரத்தில் நிரம்பும் என எதிர் பார்க்கப்படுகிறது.
தென் மேற்குப் பருவமழையின் தாக்கம் அதி தீவிரமாகி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கர்நாடகா, கேரளா, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்க்கிறது.
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் காவிரியில் வினாடிக்கு 1.5 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் கனமழை நீடிப்பதால் பெரிய அணையான கே.ஆர்.எஸ் அணையும் முழு கொள்ளளவை எட்டியது. இதைத் தொடர்ந்து தற்போது கபினி அணையில் இருந்து 1 .2 லட்சம் கன அடியும், கே.ஆர்.எஸ் அணையில் இருந்தும் 1.2 லட்சம் கன அடி நீரும் இன்று திறந்து விடப்பட்டு, மொத்தமாக 2.4 லட்சம் கன அடி நீர் தமிழக பகுதிக்கு பாய்ந்தோடி வருகிறது.
இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டமும் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 10 அடி நீர் மட்டம் உயர்ந்த நிலையில், இன்று மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1 லட்சம் கன அடியை தாண்டியுள்ளது. கர்நாடகாவில் திறந்து விடப்பட்டுள்ள 2.4 லட்சம் கன அடி நீரும் வந்து சேரும் நிலையில், ஒரே வாரத்தில் மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்புள்ளது.மேட்டூர் அணைக்கு வரலாறு காணாத நீர்வரத்து உள்ளதால், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதனால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறித்த அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.