காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து தீர்மானம் நிறைவேற வெங்கய்யா நாயுடுவும் முக்கிய காரணம் : அமித் ஷா
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவு ரத்து செய்யும் தீர்மானம் நிறைவேற துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவும் முக்கியப் பங்கு வகித்தார் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
துணை குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பின், கடந்த இரு ஆண்டுகளில் வெங்கய்யா நாயுடு ஆற்றிய பணிகள், உரைகள், சந்திப்புகள், நிகழ்வுகளை புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் புத்தகத்தை வெளியிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:தமிழில் பேச வேண்டும் என்பது தான் எனக்கு ஆசையாக உள்ளது. அதற்கான முயற்சிகளை மேற்கொண்டும் போதிய நேரம் கிடைக்காமல் போய்விட்டது. ஆனால் இதே சென்னையில் நிச்சயம் விரைவில் தமிழில் பேசுவேன். இந்த விழாவில் உள்துறை அமைச்சர், பா.ஜ.க. தலைவர் என்ற முறையில் நான் பங்கேற்க வரவில்லை. வெங்கய்யா நாயுடுவின் மாணவர் என்ற முறையில் பங்கேற்றுள்ளேன். மாணவர்களும், இளைஞர்களும் கற்றுக் கொள்வதற்கு வழிகாட்டியாக அவரது வாழ்க்கை அமைந்துள்ளது. வெங்கய்யா நாயுடு, அவரது மாணவர் பருவத்தில் கட்சியின் அங்கமான மாணவர் அமைப்பான ஏபிவிபியில் ஈடுபாடு கொண்டு பின்னர், பாஜகவில் பல்வேறு பொறுப்பு வகித்து தற்போது உயர்ந்த பதவிக்கு வந்துள்ளார். அனைவருக்கும் அறிவுரை கூறி கட்சியை வளர்த்தவர். மத்திய அமைச்சராக இருந்த போது தான் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கொண்டு வந்தார்.. அவசர நிலை கொண்டு வந்தபோது அவர் சிறைவாசம் அனுபவித்தார். கவனித்தல், கற்றல், தலைமையேற்றல் என்ற நூல் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் வழிகாட்டியாக இருக்கும்.
காஷ்மீரில் 370-வது சட்டம் ரத்து செய்யப்பட்பட வேண்டும் என போராடியவர் வெங்கய்யா நாயுடு. காஷ்மீர் பிரச்சனையை ஒரு கண்ணில் அடிபட்டால் மற்றொரு கண்ணில் வலி ஏற்படுவது போல் கூறியவர். தற்போது 370-வது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்ட போது, துணை ஜனாதிபதியாகவும், ராஜ்யசபா தலைவராகவும் வெங்கய்யா நாயுடு இருந்தார் என்பதே தனிச்சிறப்பான அம்சம். இந்த மசோதாவை ராஜ்யசபாவில் தாக்கல் செய்த போது சிறிது அச்சமாகத்தான் இருந்தது. ஆனால் இந்த மசோதா நிறைவேற வெங்கய்யா நாயுடுவும் முக்கிய காரணமாக இருந்தார்.இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டதன் மூலம் காஷ்மீரில் பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் .என அமித்ஷா பேசினார்.