மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி இந்தியா பேட்டிங்

மே.இ.தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மே.இ.தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் ஆடியது. இதில் 3 போட்டிகளையும் வென்று இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.

அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட 50 ஓவர் ஒரு நாள் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. கடந்த 8-ந் தேதி கயானாவில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.மொத்தம் 13 ஓவர்களே வீசப்பட்ட நிலையில் மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

இன்று இரண்டாவது ஒரு நாள் போட்டி, டிரினிடாட்டில் உள்ள போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனால் ரோஹித் சர்மா - ஷிகர் தவான் ஜோடி களம் இறங்கியது. மே.இ.தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் காட்ரெல் வீசிய முதல் ஓவரை எதிர்கொண்ட ஷிகர் தவான் இரண்டாவது பந்தில் 2 ரன்களை எடுத்த நிலையில் 3-வது பந்தில் எல்.பி.டபுள்யூ முறையில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் கோஹ்லி, ரோஹித்துடன் ஜோடி சேர்ந்து நிதானமான ஆடி வருகின்றனர். 8 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 39 ரன்கள் என்ற நிலையில் இருவரும் ஆடி வருகின்றனர்.

மே.இ.தீவுகளின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயிலுக்கு இந்தப் போட்டி 300 -வது ஒரு நாள் போட்டியாகும். இதனால் 300 எண் கொண்ட ஜெர்சி அணிந்து களமிறங்கியுள்ள கெயிலுக்கு இரு அணி வீரர்களும் பாராட்டு தெரிவித்தனர். 300-வது போட்டியில் ஆடும் கெயில், இன்று தனது அதிரடியை காட்டி மே.இ.தீவுகளுக்கு வெற்றியைத் தேடித் தருவார் என்ற எதிர்பார்ப்பில் அந்நாட்டு ரசிகர்கள் உள்ளனர்.

More News >>