முதலமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு கீதா உபதேசம் செய்த ஓ.பி.எஸ்.
முதல்வர் பதவியிலிருந்து நீங்கள் விலகி ஒரு வருடம் ஆகிறதில் வருத்தம் உள்ளதா? என்று செய்தியாளர் கேட்டதற்கு எதைக் கொண்டுவந்தோம் இழப்பதற்கு என்று பதிலளித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அஇஅதிமுக கட்சி அலுவலகம் முன்பு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “இந்தியாவிலும் சரி தமிழகத்திலும் சரி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் பிறந்தநாளை மிகவும் ஆடம்பரமாகக் கொண்டாடுகிற நேரத்தில், ஜெயலலிதா எங்களுக்கு சொன்னது என்னவென்றால், 'என் பிறந்தநாள் அன்று என் இல்லம் தேடி வராதீர்கள். ஏழை எளிய மக்களின் இல்லம் தேடிச்சென்று உதவி செய்யுங்கள்' என்பார்.
அவரின் வழிநடத்துதலின் பேரில், ஜெயலலிதா பிறந்தநாள் அன்று, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். அதற்கான ஆலோசனைக் கூட்டம்தான் இன்று நடந்தது’ என்றார்.
பின்னர் 'தமிழகம், பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவருகிறது' என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியது பற்றி கேள்வியெழுப்பிய போது, ‘பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய கருத்து ஜமுக்காளத்தில் வடிக்கட்டிய பொய். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. தமிழகம் அமைதிப் பூங்கா மாநிலமாக இருக்கிறது. மற்ற மாநிலங்களில் நடக்கும் சட்டம் ஒழுங்கு சம்பவங்களை ஒப்பிட்டுப்பார்த்தாலே இந்த உண்மை புரியும்’ என்றார்.
கடைசியாக, 'முதல்வர் பதவியிலிருந்து நீங்கள் விலகி ஒரு வருடம் ஆகிறது. அதில் வருத்தம் உள்ளதா?' என்று கேட்டதற்கு, “இது ஒரு நல்ல கேள்வி. எதைக் கொண்டுவந்தோம் இழப்பதற்கு” என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.