இன்று பக்ரீத் பண்டிகை இஸ்லாமிய மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து
உலகம் முழுவதும் முஸ்லிம் மக்கள் இன்று பக்ரீத் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்.
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் முஸ்லிம் மக்கள் சிறப்பு தொழுகைகளை நடத்தி, பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்த திருநாளையொட்டி, முஸ்லிம் மக்களுக்கு தமிழக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- இறைவனின் கட்டளையை ஏற்று, தன் தனையனையே இறைவனுக்கு அர்ப்பணிக்கத் துணிந்த இறைத் தூதர் இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இஸ்லாமியர்கள் அனைவருக்கும் எங்களது உளங்கனிந்த பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். விட்டுக்கொடுத்தலும், ஈகை புரிதலும், மத நல்லிணக்கமும், மனித நேயமும் தழைத்தோங்கவேண்டும். அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-இஸ்லாமியர்கள் அனைவருக்கும் தியாக திருநாள் பக்ரீத் நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தியாகம், அறம், மனிதநேயம், ஏழை-எளியவர்கள் மீது பரிவு, கருணை உள்ளிட்ட உயர்ந்த நற்செயல்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இஸ்லாமியர்கள் தியாக திருநாளை கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.ஏழைகள் மீது காட்டும் கருணை தனி மனித வாழ்வில் ஒரு இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. அதுவே சமுதாய அளவில் மிகுந்த நல்லிணக்கத்துக்கு அடையாளமாக விளங்குகிறது. சமுதாய நல்லிணக்கத்தை போற்றும் சிறப்பம்சத்தை எடுத்துரைக்கும் வகையில் இத்திருநாளை கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது அன்பான நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘‘தியாகத் திருநாளாம் ‘ஈதுல் அழ்ஹா’ எனும் பக்ரீத் பெருநாளை உவகையுடனும், குதூகலத்துடனும் கொண்டாடும் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள். தியாத்தைப் போற்றிடும் போதித்திடும் இந்நன்னாளில் மக்களிடையே அன்பும் சமாதானமும் தழைத்திடவும் ஜனநாயகம் ஓங்கிடவும் சமகூ நல்லிணக்கத்தையும், மத ஒற்றுமையையும் காத்திடவும், அநீதியை தகர்த்து நீதியை வென்றிடவும் தியாகங்கள் பல செய்திட உறுதியேற்போம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு முஸ்லீம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘‘தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளான பக்ரீத் பண்டிகையை இறையுணர்வுடன் கொண்டாடி மகிழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள். மதச்சார்பின்மைதான் இந்தியாவை காக்கும் அரணாகும். அதை தகர்ப்பதற்கு அராஜக சக்திகள் மேற்கொள்ளும்நடவடிக்கைகளுக்கு மத்திய அரசே பக்கப் பலமாக செயல்படுவது இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைத்து விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, மதச்சார்பின்மையை காக்கவும், சமய நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும் அனைவரும் இந்நாளில் உறுதி கொள்வோம்’’ என்று கூறியிருக்கிறார்தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.