காஷ்மீரில் கட்டுப்பாடுகளுடன் ஈத் திருநாள் கொண்டாட்டம் வங்கிகள், ஏடிஎம்கள் திறப்பு
நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகை மிக முக்கியமானது. துல் ஹஜ் மாதத்தின் 10-வது நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி ஜும்மா மசூதி, போபால் ஈத்கா மசூதி, மும்பை ஹமிதியா மசூதி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பல லட்சம் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
ஜம்மு காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஈத் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த பண்டிகையையொட்டி, ஸ்ரீநகரில் மண்டல ஆணையர் பஷீர்கான், ஐ.ஜி. ஸ்வயம் பிரசாத் பானி, கலெக்டர் சாகித் சவுத்ரி ஆகியோர் நேற்று இஸ்லாம் மதகுருமார்களை சந்தித்து பக்ரீத் திருநாள் ஏற்பாடுகள் தொடர்பாக விவாதித்தனர். பலத்த பாதுகாப்புடன் விதிமுறைகளில் சில தளர்வுகளை கொண்டு வருவது குறித்தும், ஈத் திருநாள் கொண்டாட்டத்தில் சிரமங்களை குறைப்பது குறித்தும் பேசினர். இதன்பின், கலெக்டர் சவுத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘இமாம்களுடன் பேசி, சிரமங்களை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்’’ என்று குறிப்பிட்டார்.
இன்று ஸ்ரீநகரில் 250 ஏடிஎம் மையங்கள் திறக்கப்பட்டன. சில வங்கிகள் திறக்கப்பட்டன. மார்க்கெட்களி்ல் சில கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. மக்கள் ஆங்காங்கே உள்ள மசூதிகளில் தொழுகை நடத்தினர். ஆனால், மொத்தமாக திரண்டு பெரிய அளவில் தொழுகை நடத்துவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அதே போல், தொலைத் தொடர்பு வசதிகள் இன்னும் முடக்கத்திலேயே உள்ளன. பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பலத்த பாதுகாப்புடன் காஷ்மீர் மக்கள் ஈத் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.