மேட்டூர் அணை நாளை திறப்பு தமிழக அரசு உத்தரவு

கர்நாடகாவில் கனமழை காரணமாக காவிரியில் திறந்து விடப்படும் அதிகபட்ச தண்ணீரால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை நாளை திறக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதையடுத்து காவிரியில் தமிழகத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்து வெள்ளம் போல் சீறிப் பாய்ந்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் - மேட்டூர் இடையே காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் கிடுகிடு என உயர்ந்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை 10 மணி நிலவரப்படி 2.10 லட்சம் கன அடியாக உள்ளது. இதனால் நேற்று காலை அணையின் நீர் மட்டம் 67 அடியாக இருந்த நிலையில், தற்போது 18 அடி உயர்ந்து, அணையின் நீர்மட்டம் 85 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பும் 44.61 டி.எம்.சி.யாக உள்ளது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று மாலைக்குள் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக நாளை காலை 8 மணிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More News >>