துர்கா பூஜைக்கு வருமான வரியா? மத்திய அரசை எதிர்த்து மம்தா நாளை போராட்டம்

‘துர்கா பூஜை நிகழ்ச்சிகளை நடத்தும் கமிட்டிகளுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை கண்டித்து நாளை(ஆக.!3) திரிணாமுல் காங்கிரஸ் போராட்டம் நடத்தும்’ என்று அக்கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜைகள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த பூஜைகளை பல்வேறு ஆலயக் கமிட்டிகள், ஏராளமான நிதி வசூலித்து பிரம்மாண்டமாக நடத்துகின்றன. இந்நிலையில், இந்த கமிட்டிகளுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து, அம்மாநில முதல்வரும், ஆளும் திரிணாமுல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி வெளியிட்ட அறிவிப்பில், ‘‘துர்கா பூஜைகளை ஏற்பாடு செய்யும் பல்வேறு கமிட்டிகளுக்கு, ‘ஏன் வருமான வரி செலுத்தவில்லை’ என்று கேட்டு வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. துர்கா பூஜை போன்று அனைத்து திருவிழாக்களையும் நாம் தேசிய திருவிழாக்களாக பெருமையுடன் கொண்டாடுகிறோம். இதற்கு வருமான வரி விதிப்பதை ஏற்க முடியாது. நாங்கள் ஏற்கனவே கங்கா சாகர் மேளா விழாக்களுக்கு விதிக்கப்பட்ட வரிகளையே வாபஸ் பெற்றிருக்கிறோம். எனவே, துர்கா பூஜைக்கு வருமான வரி விதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து கொல்காத்தாவில் சுபோத் மாலிக் ஸ்கொயர் பகுதியில் வரும் 13ம் தேதி(நாளை) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தர்ணா போராட்டம் நடத்தப்படும்’’ என்று கூறியிருக்கிறார்.

More News >>