மன்மோகன்சிங் ராஜ்யசபா எம்.பி. ஆகிறார் ராஜஸ்தானில் போட்டியிட இன்று வேட்பு மனு
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வாகிறார். இம்முறை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து எம்.பி.யாகிறார்.ராஜஸ்தானில் காலியாக உள்ள ஒரே ஒரு இடத்துக்கு நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட, மன்மோகன் சிங் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், கடந்த, 18 ஆண்டுகளாக, அசாம் மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டு வந்தார். அவரது பதவிக் காலம் சமீபத்தில் முடிவடைந்தது. அசாம் மாநிலத்தில் இம்முறை காங்கிரசுக்கு போதிய பலம் இல்லாததால் அங்கு போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனால் வேறு மாநிலங்களில் இருந்து அவரை ராஜ்யசபா எம்.பி.யாக்க திட்டமிட்டது காங்கிரஸ்.ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சியே உள்ளதால் மன்மோகன் எம்.பி.யாக தேர்வாக முடியாத சூழல் நிலவியது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பாஜக சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருந்த மதன்லால் சைனி, சமீபத்தில் இறந்ததால் அந்த இடம் காலியானது.
இதனால் காலியான அந்த ஒரு இடத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, மன்மோகன் சிங்கை ராஜஸ்தானில் இருந்து எம்.பி.,யாக தேர்வு செய்ய, காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் நிலையில், மெஜாரிட்டி எம்எல்ஏக்கள் பலம் உள்ளதால், 86 வயதான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெற்றி பெறுவதும் உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, இன்று, ஜெய்ப்பூர் வரும் மன்மோகன் சிங், வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார். அவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இதனால் மன்மோகன் சிங் எம்.பி.யாக தேர்வாவது உறுதியாகியுள்ளது.
துர்கா பூஜைக்கு வருமான வரியா? மத்திய அரசை எதிர்த்து மம்தா நாளை போராட்டம்