மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி 137 நாட்களுக்கு நீர் கிடைக்கும்
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திறந்து வைத்தார் . தொடர்ந்து 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் மழையால், காவிரியில் தமிழகத்துக்கு பெருமளவு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், கடந்த 8-ந்தேதி 43 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்தது. இன்று அதிகாலை 4 மணிக்கு நீர் மட்டம் 100 அடியை தாண்டியது. நீர்வரத்தும் 2.5 லட்சம் கன அடிக்கும் மேலாக இருப்பதால் ஒரே நாளில் முழுக் கொள்ளளவை எட்டும் என எதிர் பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் காவிரி டெல்டா பாசன விவசாயத்திற்காக மேட்டூர் அணை இன்று காலை திறக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணையை திறந்து வைத்தார்.அப்போது அணையிலிருந்து சீறிப் பாய்ந்த காவிரி நீரில், முதல்வரும், அமைச்சர்களும், அதிகாரிகளும் மலர் தூவி வணங்கி வரவேற்றனர்.
அணையை திறந்து வைத்த பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்,மேட்டூர் அணையை திறக்க முடியாமல் இருந்தது குறித்து வேதனையில் இருந்தேன். தற்போதுமழை காலதாமதமாக பெய்தாலும் மேட்டூர் அணை நிரம்பி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.கர்நாடகாவில் 2 முக்கிய அணைகளும் நிரம்பிவிட்டன - அவர்கள் தண்ணீரை திறந்தே ஆக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அணை தண்ணீர் திறப்பால், 16.05 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் மேட்டூர் அணை நீரால் பாசன வசதி பெறும். விவசாயிகளுக்கு தேவையான நீர் இந்த ஆண்டு வழங்கப்படும்.
சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்காகவும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் 137 நாட்களுக்கு தினமும் தண்ணீர் திறக்கப்படும்.
கடந்த ஆண்டு பாசனத்திற்கு 212 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டது.வருண பகவான் கருணையால் இந்த ஆண்டு காவிரி டெல்டா விவசாயிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கும்.விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகவும், முறை வைத்தும் பயன்படுத்த வேண்டும் .விதை நெல் மற்றும் உரம் போதுமான அளவிற்கு கையிருப்பில் உள்ளது
சுமார் 500 கோடி ரூபாய் செலவில் இந்த ஆண்டு சுமார் 1800 ஏரிகள் மேம்படுத்தப்பட உள்ளன.குளம், குட்டை மற்றும் ஊரணிகளையும் தூர் வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை வசம் உள்ள ஏரிகளும் தூர்வாரப்பட்ட உள்ளன.மழை நீர் வீணாகாமல் இருக்க தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றனமேட்டூர் - கொள்ளிடம் இடையே மேலும் 3 தடுப்பணைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.காவிரியின் குறுக்கே ஒரு தடுப்பணைக்கான பணிகள் துவங்கியுள்ளது.ஒரு தடுப்பணைக்கான பணி துவங்க உள்ளது.
கோதாவரி - காவிரி நதி நீர் இணைப்பை நிச்சயமாக அதிமுக அரசு சாத்தியமாக்கும் . கோதாவரி - காவிரி நதி நீர் இணைப்பால் தமிழகத்திற்கு 125 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.
கர்நாடகா கன மழை - காவிரியில் 1.5 லட்சம் கனஅடி திறப்பு; மேட்டூர் கிடுகிடு உயர்வு