கொள்ளையருடன் துணிச்சல் காட்டிய நெல்லை வீர தம்பதி.. நாளை சுதந்திர நாளில் அரசு கவுரவம்
அரிவாளுடன் வந்த முகமூடி கொள்ளையரை செருப்பு, சேர் கொண்டு அடித்து விரட்டிய ,வீர தம்பதிக்கு, நாளை நெல்லையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது அரசு சார்பில் பாராட்டு தெரிவித்து கவுரவிக்கப்பட உள்ளனர்.
நெல்லை மாவட்டம் கடையம் அருகே முகமூடி கொள்ளையரை செருப்பு,சேர்களைக் கொண்டு வீரத்துடன் துரத்தியடித்த சண்முகவேல்-செந்தாமரை தம்பதிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. வயதான காலத்திலும் கூட நெல்லை சீமைக்கே உரித்தான வீரத்துடன், இந்த வீர தம்பதியின் துணிச்சலான போராட்டம் குறித்த சிசிடிவி காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதனால் அந்த வீரத் தம்பதிகளுக்கு இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. பிரபலங்கள் பலரும் கூட தங்கள் டிவீட்டர் பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில், அந்த வீடியோ காட்சிகளை மேற்கோள் காட்டி பாராட்டு தெரிவித்துள்ளார். அதே போல் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் உள்ளிட்ட பலரும் டிவிட்டரிலும், தொலைபேசி மூலமும் வீரத் தம்பதியின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர்.
நெல்லை மாவட்ட எஸ்.பி. அருண் சக்தி குமார், நேரில் சென்று சண்முகவேல்-செந்தாமரை தம்பதியின் துணிச்சலை மெச்சி வாழ்த்து தெரிவித்தார். மேலும் முன்னெச்சரிக்கையாக கண்காணிப்பு கேமரா பொருத்தியதற்கும் பாராட்டு தெரிவித்தார்.
இதற்கிடையே நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் இத்தம்பதிக்கு பாராட்டும் கவுரமும் அளிக்கப்பட உள்ளது. நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் சண்முகவேல் - செந்தாமரை தம்பதி வீரத்தை பாராட்டி, மாவட்ட ஆட்சியர் ஷில்பா கவுரவிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரிவாளுடன் வந்த கொள்ளையரை செருப்பு .. சேர்.. கட்டைகளால் விரட்டியடித்த வீரத் தம்பதி .. குவியும் பாராட்டுகள்