மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது நீர்மட்டம் 108 அடி
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 50 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. இதனால் வேகமாக நிரம்பி விடும் என எதிர் பார்க்கப்பட்ட அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து 108 அடியாக உள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கபினி, கேஎஸ்ஆர் அணைகள் வேகமாக நிரம்பின. இதனால் காவிரியில் தமிழகத்துக்கு வரலாறு காணாத அளவுக்கு அதிகபட்சமாக 3 லட்சம் கன அடி நீர் வரை திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணையும் 6 நாட்களில் 60 அடி வரை கிடு கிடுவென உயர்ந்து, நேற்று காலை 100 அடியை தாண்டியது. இதே நிலை நீடித்தால் அடுத்த ஓரிரு தினங்களில் 120 அடியை எட்டி அணை நிரம்பி விடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதனால் டெல்டா பாசனத்திற்காக நேற்று தண்ணீரும் திறந்து விடப்பட்டது.
ஆனால் கர்நாடகாவில் மழை குறைந்ததால் நீர்வரத்தும் படிப்படியாக குறைந்துவிட்டது. நேற்று வரை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.50 லட்சம் கன அடியாக இருந்த நிலையில் தற்போது . மேட்டூருக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவும் 40 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. இதனால் ஓரிரு நாளில் வேகமாக நிரம்பி விடும் என எதிர் பார்க்கப்பட்ட மேட்டூர் அணை நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து இன்று 108 அடியை தொட்டுள்ளது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை திறப்பின்போது குண்டு வெடிக்கும்.. முதல்வர் எடப்பாடிக்கு மிரட்டல்.. திருப்பூர் நபர் கைது