வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
நாம் பிறந்ததிலிருந்தே முதலாளித்துவ பண்பாட்டில்தான் வளர்க்கப்படுகிறோம். சாதிப்பது, இலக்குகளை எட்டுவது இவையே முக்கியம் என்று நமக்குப் போதிக்கப்படுகிறது. செயல்பாட்டின் வெற்றியையும் உற்பத்தி திறனையும் குழப்பிக் கொள்கிறோம். வேலைப்பளுவோடு பரபரப்பாக இருப்பதே பெருமைக்குரிய விஷயம் என்று நம்புகிறோம். அன்றாட பரபரப்பின் மத்தியில் நம் உடலின், சிந்தனையின், உணர்வின் மொழியை கவனிக்க மறந்துபோகிறோம்.
எப்போதும் மகிழ்ச்சியாக, உற்பத்தி பயன் மிகுந்தவர்களாக, வெற்றிகரமானவர்களாகவே இருக்க விரும்புகிறோம். வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தத்தின் காரணமாக அடிக்கடி கவனத்தை மாற்றிக் கொள்கிறோம். கவனம் சிதறுவதால் நிலைத்தன்மை குலைந்து, அதிருப்தி கொண்டு, சந்தோஷத்தை தொலைத்தவர்களாகிறோம். லௌகீகம் அல்லது உலகியல் ரீதியான வெற்றிகளை பெறாதபோது வாழ்வையே தொலைத்துவிட்டதுபோல் உணர்கிறோம்.
சுய விழிப்புணர்வு:
சுய விழிப்புணர்வு இல்லாததே இந்த தோல்வி உணர்வுக்குக் காரணமாகிறது. நம் சிந்தனையையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்த கற்றுக்கொள்ள சுய விழிப்புணர்வு அவசியம். நம்முடைய பலம், பலவீனம், உணர்ச்சிகள், சிந்தனைகள், மாண்பு இவற்றை சரியாக புரிந்துகொள்வதுடன் அவை சுற்றியுள்ளவர்களை எப்படி பாதிக்கும் என்றும் அறிந்துகொள்ள வேண்டும். நம்மை நாமே நிர்வகிக்கும் சுய மேலாண்மை மற்றும் சுய விழிப்புணர்வு ஆகியவை சமவிகிதத்தில் இல்லையென்றால் பயன் கிடைக்காது.
உணர்வு ரீதியான ஆரோக்கியம்:
நமது சிந்தனையை, உணர்ச்சியை, செயலை கட்டுப்படுத்துவதோடு நம்மை சீர்தூக்கிப் பார்க்கவும் நேரத்தை ஒதுக்கவேண்டும். குறிப்பிட்ட ஒரு விழாவுக்கு உரியவிதத்தில் ஆடை உடுத்தினால் மனம் நம்பிக்கையால் நிறைந்திருக்கும். இந்த நம்பிக்கை மற்றவர்களோடு சரியான விதத்தில் பேசுவதற்கு, கருத்துகளை தெரிவிப்பதற்கு உதவும். நம் உடல்மொழியில் தன்னம்பிக்கை வெளிப்படும். பேச்சுத் திறமை இருந்தால் பல காரியங்களை சாதிக்கலாம் என்றாலும் அக்கறை கொண்ட, பராமரிக்கிற, உணர்வுகளை பகிர்ந்து கொள்கிற தன்மையே உங்களோடு பழகிறவர்களோடு நெருக்கத்தை உண்டாக்கும். அந்த நெருக்கம் உணர்வுப் பூர்வமாக உங்களை ஆரோக்கியமானவர்களாக பாதுகாக்கும்.
வெற்றிக்கு உதவும் ஆறு காரியங்கள்:
உங்கள் உடல், மனம். எண்ணம், உணர்வு, ஆளுமை, திறன், குறைபாடு ஆகியவை குறித்து சுய விழிப்புணர்வு கொண்டவர்களாக இருத்தலும், மற்றவர்களின் கோணத்திலிருந்து நம்மை பார்த்தலும் உணர்வுப்பூர்வமான விதத்தில் நம்மை புத்திசாலிகளாக்கும். வாழ்வு குறித்த நம் நோக்கம், தரிசனம் ஆகியவற்றை குறித்த தெளிவு வேண்டும். தைரியமாக தீர்மானிக்கவேண்டும். மற்றவர்களோடு உரையாடல், கடிதம் போன்ற முறைகளில் தொடர்பு கொள்ளும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். தொடர்பு வட்டத்தை பெரிதாக்கிக் கொள்ள வேண்டும்.
இவற்றையெல்லாம் செய்தால் உணர்வுப்பூர்வமாக புத்திசாலிகளாக மாற முடியும். அப்போது வாழ்க்கை குறித்து, உறவுகள் குறித்து, சூழல் குறித்து சமநிலையுள்ளவர்களாக இருக்க முடியும்; அப்போது அசைக்க முடியாத நம்பிக்கையுடன் நிமிர்ந்து நடந்து வெற்றிகளை பெற இயலும்.