பிரிவு 370 அவசியமானது எனில் ஏன் நிரந்தரம் ஆக்கவில்லை? சுதந்திர தின உரையில் மோடி கேள்வி
நாட்டின் 73-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் , பிரதமர் நரேந்திர மோடி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது 21 முறை குண்டுகள் முழங்கின. தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஏற்கனவே 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிரதமர் மோடி இம்முறை தொடர்ந்து 6-வது ஆண்டாக செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக, முப்படையினரின் அணிவகுப்பையும் பிரதமர் மோடி ஏற்றார்.
கொடியேற்றிய பின் பிரதமர் மோடி சுதந்திர தின உரையாற்றினார்.அவர் பேசியதாவது:- இந்த சுதந்திர தினவிழாவில் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள். விடுதலைப் போராட்டத் தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பேற்ற 70 நாட்களுக்குள் பல முக்கிய முடிவுகளை அரசு எடுத்துள்ளது. முத்தலாக் தடை சட்டத்தை இஸ்லாமிய பெண்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
அரசியல் சட்டப்பிரிவுகள் 370, 35 ஏ ஆகியவை ரத்து செய்யப்பட்டதை மக்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் மூலம், சர்தார் வல்லபாய் படேலின் கனவு நனவாகியுள்ளது.
பிரிவு 370 தற்காலிகமானது என்று அந்தப் பிரிவிலேயே கூறப்பட்டுள்ளது. நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளில் எத்தனையோ மெஜாரட்டி அரசு பதவி வகித்துள்ளன. ஆனாலும், அந்த பிரிவு தற்காலிகமானது என்று தான் இருக்கிறது. ஏனெனில், அந்தப் பிரிவு நாட்டுக்கு நல்லதல்ல என்று அவர்களுக்கு தெரியும். அதனால்தான், அதை தற்காலிகமானதாகவே வைத்திருந்தார்கள். நிரந்தரமான பிரிவாக மாற்றவில்லை. எல்லோரும் இந்தப் பிரிவை நீக்க வேண்டும் என்று எல்லோரும் விரும்பினார்கள். ஆனால், அரசியல் காரணங்களுக்காக அதை செய்யவில்லை.
ஆனால், நாங்கள் எந்தப் பிரச்னையையும் உருவாக்கவும் விரும்புவதில்லை. எந்த பிரச்னையையும் இழுத்து கொண்டே செல்வதையும் விரும்புவதில்லை, இன்றைக்கு ஒரே நாடு, ஒரே அரசியல் சட்டம் என்ற நிலையை கொண்டு வந்திருக்கிறோம். அதே போல், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது இப்போது விவாதத்திற்கு வந்திருப்பது நல்ல விஷயம். அடுத்த 5 ஆண்டுகளில் அடைய வேண்டிய வளர்ச்சியை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறோம். நாடு மாறுமா எனக்கேட்டார்கள் நான் மாற்றிக்காட்டினேன். அனைவரும் ஒன்றிணைந்து மாற்றத்தை கொண்டு வருகிறோம்”
இவ்வாறு அவர் பேசினார்.
காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதில் அமெரிக்காவுக்கு வேலையில்லை; இந்திய தூதர் அறிவிப்பு