வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிப்பு திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டம் உதயம் : முதல்வர் எடப்பாடி
வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையை தலைமையிடங்களாகக் கொண்டு 2 புதிய மாவட்டங்கள் உதயமாக உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
நாட்டின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேசியக்கொடியை ஏற்றினார். பின்னர் பல்துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகளை வழங்கிய முதல்வர் எடப்பாடி சுதந்திரதின விழா உரையாற்றினார்.
அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்படும் என அறிவித்தார். அதன்படி திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டங்கள் உதயமாகின்றன. 2 புதிய மாவட்டங்கள் சேர்க்கப்படுவதால் தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 37ஆக உயர்கிறது .
சமீபத்தில் தான் நெல்லை மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமும், காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டை தலையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி அறிவித்திருந்தார். அதே போல் கடந்த பிப்ரவரி மாதம் விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
100 அடியை கடந்தது மேட்டூர் அணை : ஒரே நாளில் 20 அடி உயர்வு; இன்று நிரம்ப வாய்ப்பு