110 அடியை மெதுவாக எட்டிய மேட்டூர் அணை நீர்மட்டம் நிரம்புவது எப்போது?

கிடு கிடு வென உயர்ந்து 5 நாட்களில் 100 அடியை எட்டிய மேட்டூர் அணையின் நீர்மட்டம், நீர் வரத்து குறைந்ததால் மெதுவாக உயர்ந்து 110 அடியை எட்டியுள்ளது. இதனால் அணை நிரம்ப ஒரு வாரம் ஆகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

கர்நாடகா, கேரள மாநிலங்களில் கடந்த வாரம் பெய்த கனமழையால், காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பின. இதனால் அந்த அணைகளில் இருந்து 3 லட்சம் கன அடி தண்ணீர் வரை தமிழகத்திற்கு காவிரியில் நீர் வெளியேற்றப்பட்டதால் கடந்த 12-ந் தேதி மேட்டூர் அணை நீர்மட்டமும் கிடு கிடுவென உயர்ந்தது. நேற்று முன்தினம் 100 அடியை எட்டிய நீர்மட்டம், நேற்று 108 அடியாக உயர்ந்தது. இதனால் ஓரிரு நாளில் 120 அடி முழு கொள்ளளவை எட்டி அணை நிரம்பி விடும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையும் நேற்று காலை திறக்கப்பட்டது.

இந்நிலையில் கேரளா மற்றும் கர்நாடகாவில் மழை குறைந்ததால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டது.கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 28 ஆயிரம் கன அடியும், கபினி அணையில் 30 ஆயிரம் கன அடி தண்ணீரும் என மொத்தம் 58 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை 50 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர் மட்டமும் மெதுவாக உயர்ந்து 110.33 அடியாக உள்ளது.மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக 10,500 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது.இதனால் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் கேரளாவின் வயநாடு பகுதியில் மீண்டும் கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, தமிழகத்திற்கு நீர் திறப்பும் அதிகரிக்கப்படும் வாய்ப்பும் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது ; நீர்மட்டம் 108 அடி

More News >>