காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. இன்று ஆலோசனை
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல்சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்தது தொடர்பாக, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் இன்று ஆலோசனை நடத்தவுள்ளது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது அரசியல் சட்டப்பிரிவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அம்மாநிலத்தை ஜம்முகாஷ்மீர், லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்துள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த 9ம் தேதி, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி, சீனாவுக்கு சென்று ஆதரவு கோரினார். அதன்பின், சீனா தங்களுக்கு ஆதரவு அளிப்பதாக கூறினார்.
காஷ்மீரில் நடந்த மாற்றங்கள் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை அவசரமாக கூட்ட வேண்டும் என்று கவுன்சிலுக்கு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை சீனா ஆதரித்துள்ளது. பாகிஸ்தானின் கோரிக்கைப்படி, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலை கூட்டுமாறு அதன் தலைவரை சீனா கேட்டுக்கொண்டது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீனா நிரந்தர உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரும், போலந்து நாட்டின் நிரந்தரப் பிரதிநிதியுமான ஜோயன்னா ரோனக்கா கூறுகையில், ‘‘பாகிஸ்தான், சீனா ஆகியவற்றின் கோரிக்கையை ஏற்று, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஆக.16ம் தேதி(இன்று) ரகசிய ஆலோசனை கூட்டமாக நடத்தப்படும்’’ என்று தெரிவித்தார்.
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இது போன்ற ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுவது சாதாரண விஷயம்தான். காஷ்மீர் விவகாரத்தைப் பொறுத்தவரை, அது இந்தியா, பாகிஸ்தான் நாடுகளே இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு காண வேண்டுமென்று அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே இந்தியாவுக்கு ஆதரவாக கூறியுள்ளன.
எனவே, அமெரிக்கா, ரஷ்யா உள்பட 15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தில் இந்தியாவின் நிலைக்கு எதிராக எந்த முடிவும் ஏற்படாது என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அதனால், காஷ்மீர் விவகாரத்தை சர்வதேசப் பிரச்னையாக மாற்ற நினைக்கும் பாகிஸ்தானின் முயற்சி பலிக்காது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரே நாடு, ஒரே தேர்தல்; மோடியின் அடுத்த திட்டம்