அஸ்வின், ஜடேஜாவுக்கு மாற்றா? இந்தியக் கிரிக்கெட் அணியில் புது குழப்பம்
கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு இன்னும் ஓர் ஆண்டே உள்ள நிலையில் நட்சத்திர பந்துவீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜாவுக்கு மாற்று வீரர்களை களமிறக்குவது தொடர்பான விவதாங்கள் இந்தியக் கிரிக்கெட் அணியில் அதிகரித்து வருகின்றன.
இந்தியக் கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இந்திய பந்துவீச்சாளர்கள் சஹால் மற்றும் குல்தீப் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். சமீபத்தில் கேப்டன் விராட் கோலி, 'சஹால்- குல்தீப் ஆகிய இருவரும் 2019-ம் ஆண்டு உலகக்கோப்பையின்போது அணியின் தூண்களாக இருப்பர்' எனப் பாராட்டிக் கூறினார்.
இதையடுத்து விராட் கோலியின் பாராட்டு குறித்து அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாரத் கூறுகையில், "அஸ்வினும் ஜடேஜாவும் இன்னும் களத்தில் உள்ளனர்" எனப் பதிலடி கொடுப்பதுபோல் பேசினார். இந்நிலையில் தற்போது கிரிக்கெட் தேர்வு வாரியத்தில் உள்ள அதுல் வாசன் புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளார். அதாவது, "2019-ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில் அஸ்வினும் ஜடேஜாவும் இருப்பது கடினம்" எனக் கூறியுள்ளது மீண்டும் விவாத மேடையில் சூடு கிளப்பியுள்ளது.