முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை வங்கிக் கடன் பிரச்னை காரணமா?

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி. சந்திரசேகர் நேற்றிரவு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் காஞ்சி தலைவாஸ் அணியின் உரிமையாளராக இருந்த சந்திரசேகர், வங்கிக் கடன் தொல்லையால் தற்கொலை முடிவை மேற்கொண்டதாக பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.

57 வயதான வி.பி.சந்திரசேகர் சென்னை மயிலாப்பூர் விஸ்வேஸ்வர்புரத்தில் வசித்து வந்தார்.

நேற்று இரவு சந்திரசேகர் வீட்டின் அறையில் இருந்து நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் கதவை தட்டினர். கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போது அவர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதனால் மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சந்திரசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இளம் வயதிலேயே தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் அதிரடி வீரராக களம் கண்டு, பின்னர் இந்திய அணியிலும் விளையாடியவர் வி.பி.சந்திரசேகர். இந்திய அணியில் சில காலமே விளையாடினாலும், தமிழக அணி பயிற்சியாளர், மேலாளர், கிரிக்கெட் வர்ணனையாளர் என தொடர்ந்து அவரது வாழ்க்கைப் பயணம் கிரிக்கெட்டுடனே இருந்து வந்தது. அவருடைய சோக முடிவு தமிழக கிரிக்கெட் ஆர்வலர்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

இந்திய அணிக்காக 1988-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை 7 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார் வி.பி.சந்திரசேகர். அதிரடி பேட்ஸ்மேனான இவர் தமிழக அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் 81 ஆட்டங்கள் ஆடி, 4,999 ரன்கள் குவித்துள்ளார். தமிழக அணிக்கு பயிற்சியாளராகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மேலாளராகவும் இவர் பணியாற்றி உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக தோனியை கொண்டு வந்ததிலும் இவருடைய பங்கு முக்கியமானது.

தற்போதும், தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் காஞ்சி அணியின் உரிமையாளராகவும் இருந்து வந்தார் வி.பி.சந்திரசேகர். நேற்று தான் டிஎன்பிஎல் இறுதிப் போட்டி சென்னையில் நடைபெற்றது.இந்த நேரத்தில் சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் காஞ்சி அணி உரிமையாளராக இருந்த சந்திரசேகருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கிகளில் வாங்கிய கடன் சுமையும் அதிகரித்து கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருந்தாராம். இந்நிலையில் தற்போதைய டிஎன்பிஎல் கிரிக்கெட்டிலும் காஞ்சி அணி சோபிக்கவில்லை. இந்த விரக்தியே வி.பி.சந்திரசேகரின் தற்கொலை முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

விஸ்வரூபம் எடுத்த கோஹ்லி-ஐயர் ஜோடி ; மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா

More News >>