சாலையில் முதல்வர் படங்களை போட்டு காங்கிரஸ் போராட்டம்
ஐதராபாத்தில் சாலை பள்ளங்களில் தேங்கிய நீரில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் படங்களை போட்டு, காங்கிரசார் நூதனப் போராட்டம் நடத்தினர்.
தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி(டி.ஆர்.எஸ்) கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. கட்சியின் நிறுவனத் தலைவர் கே.சந்திரசேகர ராவ் முதலமைச்சராகவும், அவரது மகனும், கட்சியின் செயல் தலைவருமான கே.டி.ராமாராவ், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராகவும் உள்ளனர். காங்கிரஸ் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் தொடர்ச்சியாக பெய்த மழையால் தலைநகர் ஐதராபாத், செகந்திரபாத் நகரங்களில் முக்கிய சாலைகளில் கூட பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த பள்ளங்களில் மழை நீர் தேங்கிக் கிடக்கிறது. இதையடுத்து, சாலைகளை சரியாக பராமரிக்கவில்லை என்று கூறி, காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு தலைவர் ேஷக் அப்துல்லா சோகைல் தலைமையில் அக்கட்சியினர் நூதனப் போராட்டம் நடத்தினர். அவர்கள் முதலமைச்சர் சந்திரசேகரராவ் மற்றும் அமைச்சர் ராமாராவின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களை ஏராளமாக வாங்கிக் கொண்டு வந்தனர். மீடியாக்காரர்களை அழைத்து தாங்கள் அரசைக் கண்டித்து வித்தியாசமான போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தனர்.
பின்னர், சாலைகளில் உள்ள பள்ளங்களில் தேங்கிய மழை நீரில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் படங்களை போட்டு, அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினர். ஷேக்அப்துல்லா கூறுகையில், ‘‘முதலமைச்சர் சந்திரசேகர ராவ், பிரகதிபவன் என்ற பிரம்மாண்ட மாளிகை கட்டி, ஆடம்பரமாக வாழ்ந்து வருகிறார். அவரது மகனோ ட்விட்டரில் மட்டும்தான் வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் மக்களுக்கு தேவையான வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை. சாலை வசதிகள் கூட சரியாக பராமரிக்கப்படுவதில்லை. அதனால்தான், இந்தப் போராட்டத்தை நடத்தினோம்’’ என்றார்.
திரிணாமுல் காங். எம்.பி.க்கு சம்மன் அனுப்பியது சி.பி.ஐ; எப்போது தெரியுமா?