மது மற்றும் புகை பழக்கமுள்ளவரா? இதோ ஒரு நற்செய்தி

அதிகமாக ஆல்கஹால் அருந்தக்கூடியவர்கள் மற்றும் புகை பிடிக்கக்கூடியவர்களை புற்றுநோய், இதய நோய் இவற்றிலிருந்து காக்கும் பண்பு தேநீர், ஆப்பிள் போன்றவற்றிற்கு உள்ளது என்று ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்றின் ஆய்வு தெரிவித்துள்ளது.

டேனிஷ் டயட்

ஆஸ்திரேலியாவிலுள்ள எடித் கோவன் என்ற பல்கலைக்கழகத்தின் மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல் துறை 23 ஆண்டுகளாக 53,048 பேரிடம் ஆராய்ச்சி செய்துள்ளது. 'டச்சு உணவுமுறை' அல்லது 'டேனிஷ் டயட்' என்ற உணவு முறையை கடைபிடிப்பவர்களைக் கொண்டு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இம்முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நோயாளிகள் விரைவில் உடல் எடை குறைவதற்காக டென்மார்க்கிலுள்ள்ள மருத்துவமனை ஒன்றை சேர்ந்த மருத்துவர் பரிந்துரைத்த உணவு முறையே பரவலாக 'டேனிஷ் டயட்' என்று அழைக்கப்படுகிறது.

ஃப்ளவனாய்டுகள்

ஃப்ளவனாய்டுகள் என்னும் தாவர பொருள் அடங்கிய உணவு பொருள்களை அதிக அளவில் சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் மற்றும் இதயநோய்கள் வரும் வாய்ப்பு குறைவு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். தாவரங்கள் தங்கள் வளர்ச்சிக்கும் நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் பயன்படுத்தும் பொருளே ஃப்ளவனாய்டு ஆகும். இவை குறைந்த மூலக்கூறு எடை கொண்ட ஃபீனாலிக் கூட்டுப்பொருளாகும்.

இரத்த நாள பாதிப்பு

சிகரெட் புகைப்போர் மற்றும் அதிக அளவு ஆல்கஹால் (ஒரு நாளைக்கு 14 கிராமுக்கு மேலான ஆல்கஹால்) அருந்துவோருக்கு புற்றுநோய் மற்றும் இதய நோய் வரும் வாய்ப்பு அதிகம். மதுவும் புகையும் இரத்த நாளங்களில் அழற்சி ஏற்படச் செய்து பாதிப்பை உருவாக்குகின்றன. ஃப்ளவனாய்டுகள் அழற்சியை தடுத்து இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தும் ஆகவே, மது மற்றும் புகை பழக்கம் உள்ளவர்கள் ஃப்ளவனாய்டு அதிகம் உள்ள உணவு பொருள்களை சாப்பிட்டு வந்தால், இந்நோய்கள் பாதிக்கக்கூடிய வாய்ப்பு குறையும்.

ஆனால், இந்தப் பழக்கங்களால் வரும் பாதிப்புகளை எப்போதும் ஃப்ளவனாய்டு உணவு பொருள்களால் தடுக்க இயலும் என்று கூற இயலாது. உடல்நலத்திற்குக் கேடான அப்பழக்கங்களை விட்டுவிடுவதே சிறந்தது என்று தலைமை ஆராய்ச்சியாளர் டாக்டர் நிகோலா பாண்டோனா தெரிவித்துள்ளார்.என்ன சாப்பிடலாம்?

பல்வேறு தாவர உணவுகளில் வெவ்வேறு அளவுகளில் ஃப்ளவனாய்டு உள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு குவளை தேநீர், ஒரு ஆப்பிள், ஒரு ஆரஞ்சு, 100 கிராம் ப்ளூபெர்ரி மற்றும் 100 கிராம் பிரெக்கோலி ஆகிய உணவு பொருள்களில் 500 மில்லி கிராமுக்கும் அதிகமாக ஃப்ளனாய்டு உள்ளதாக கூறப்படுகிறது.

எந்த வகை புற்றுநோய் மற்றும் இதய நோய்களிலிருந்து ஃப்ளவனாய்டு உணவு பொருள்கள் பாதுகாப்பை அளிக்கின்றன என்பது பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து வருகிறது.

More News >>