காஷ்மீர் விவகாரத்தில் பாக்., சீனாவுக்கு மூக்குடைப்பு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கைவிரித்தது
காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்க முயன்ற பாகிஸ்தான் மற்றும் சீனாவின் முயற்சி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தோல்வியில் முடிந்தது. ரகசியமாக நடத்தப்பட்ட பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை நீக்கியது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று கூறப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும், மத்திய அரசு கடந்த வாரம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு கடும் எதிர்ப்பு காட்டிய பாகிஸ்தான், காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டும் என அமெரிக்கா சீனா மற்றும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு உள்ளிட்ட பல நாடுகளிடம் கெஞ்சியது. ஆனால் ரஷ்யா,அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பலவும், காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் அதில் தலையிட முடியாது என கைவிரித்து விட இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பும் மவுனம் காத்து வருகிறது.
இதனால் காஷ்மீர் பற்றி விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை உடனடியாக கூட்ட வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. இதற்கு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக உள சீனா மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக துணை போனது. காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரகசிய விவாதம் நடத்தலாம் எனக் கூறியது.
சீனாவின் இந்த முடிவையடுத்து நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு கவுன்சிலின் ரகசிய கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது.இதில் நிரந்தர உறுப்பினர் நாடுகளான அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் பெல்ஜியம், குவைத், பெரு, போலந்து, தென் ஆப்ரிக்கா, ஜெர்மனி, இந்தோனேசியா ஆகிய உறுப்பினர் அல்லாத 10 நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை.
இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த 1971-ல் நடந்த போருக்கு பின், காஷ்மீர் விவகாரம் பற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்கப்பட்டது. தற்போது 48 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் விவகாரம் பற்றி விவாதிப்பதற்காக பாதுகாப்பு கவுன்சில் நேற்று கூடியது.
மூடப்பட்ட அறைக்குள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், காஷ்மீர் பிரச்னையில் ஐ.நா.தலையிட வேண்டும் என்ற சீனாவின் கருத்துக்கு வேறு எந்த நாடுகளும் உடன்படாததால் விவாதம் ஏதுமின்றி சிறிது நேரத்திலேயே கூட்டம் முடிவடைந்தது.இதனால் ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை சர்வதேச விவகாரமாக்க முயன்ற பாகிஸ்தான் மற்றும் சீனாவின் முயற்சி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தோல்வியில் முடிந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிப வேண்டும் என அதிபர் டிரம்ப்பிடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று மீண்டும் கெஞ்சியதாகவும், ஆனால் டிரம்ப் மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.