தமிழகம் முழுவதும் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. வட மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்பட பல முக்கிய நகரங்களில் கடந்த மாதம் வரை தண்ணீர் பற்றாக்குறை காணப்பட்டது. சென்னை மக்கள் தண்ணீர் பஞ்சத்தால் அவதிப்பட்டனர்.
இதன்பின், கடந்த மாத இறுதியில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ந்தனர். எனினும், போதிய மழை பெய்யாமல் இருந்தது. இந்நிலையில், சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு நேற்றிரவு சென்னையி்ல் ஓரளவு மழை பெய்தது. இன்றும் சென்னையில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
மேலும், காஞ்சிபுரம், சேலம், கடலூர், திருச்சி, வல்லம், ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி மற்றும் கடலோர மாவட்டங்களிலும் நேற்று மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இன்றும் அங்கு கனமழை பெய்வதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கடலூரில் 13 செ.மீ, போளூரில் 12 செ.மீ, விழுப்புரத்தில் 10 செ.மீ, தஞ்சாவூரில் 8 செ.மீ. என்று மழை பதிவாகியுள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் மழை பெய்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை உள்பட வடமாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
110 அடியை மெதுவாக எட்டிய மேட்டூர் அணை நீர்மட்டம் ; நிரம்புவது எப்போது?