பிரியங்கா காந்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஜெய்ப்பூர் கோர்ட்டில் தாக்கல்

பெஹ்லுகான் கொலை வழக்கின் தீர்ப்பை விமர்சித்ததாக பிரியங்கா காந்தி மீது ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற கால்நடைச் சந்தையில் அரியானாவைச் சேர்ந்த பெஹ்லு கான் என்பவர், மாடுகள் வாங்கிக் கொண்டு, தமது மகன்களுடன் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். டெல்லி-ஆல்வார் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அவர்களின் வாகனத்தை, பெஹ்ரர் அருகே, ஒரு கும்பல் வழிமறித்து தாக்கியது. பசுபாதுகாப்பு என்ற போர்வையில் அந்த கும்பல் தாக்கியதாக கூறப்பட்டது. இதில் படுகாயமடைந்த பெஹ்லு கான், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பெஹ்லு கான் மற்றும் அவரது மகன்கள் தாக்கப்படும் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள், சமூக ஊடகங்களில் வெளியாகி, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த படுகொலை தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த ஜெய்ப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், வழக்கில் சரியான ஆதாரங்கள் இல்லை என்று கூறி, ஆறு பேரையும் விடுதலை செய்தது.

இந்த தீர்ப்பு குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் அரசு இதில் தலையிட்டு நீதி கிடைக்க செய்யும் என நம்புகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து, தீர்ப்பை விமர்சித்ததாக கூறி, பிரியங்கா காந்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சுதிர் ஓஜா என்பவர் தாக்கல் செய்துள்ளார். சுதிர் ஓஜா கூறுகையில், ‘‘தீர்ப்பை விமர்சித்து, சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் பிரியங்கா காந்தி கருத்து கூறியுள்ளார். அதனால், அவர் மீது இ.பி.கோ. 504, 506, 153 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளேன். இதன் விசாரணை வரும் 26ம் தேதி நடைபெறும்’’ என்று தெரிவித்தார்.

இந்த வழக்கில் பிரியங்காவுக்கு சம்மன் அனுப்பப்பட்டால், வரும் 26ம் தேதி ஜெய்ப்பூர் குற்றவியல் மாஜிஸ்திரேட் முன்பாக பிரியங்கா காந்தி ஆஜராக வேண்டியிருக்கும் என்று தெரிகிறது.

எல்லாவற்றையும் வாங்க முடியாது; பாஜகவுக்கு பிரியங்கா கண்டனம்

More News >>