ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ 6 உயர்வு தமிழக அரசு உத்தரவு
ஆவின் பால் விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ள இந்த விலை உயர்வு வரும் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பால் விலை உயரப் போகிறது என கடந்த சில நாட்களாகவே தகவல் வெளியாகி வந்தது. பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும், விலைவாசியும் அதிகரித்துள்ளது. சாதாரண வேலை பார்ப்போரின் சம்பளமும் கூட அதிகரித்துள்ளது. இதனால் பால் விலையும் உயர்த்தப்படும் என்று சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று பால் விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த பால் விலை உயர்வு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புல் கூறப்பட்டுள்ளதாவது:
பசும்பால் கொள்முதல் விலை ரூ 4 கூடுதலாக லிட்டருக்கு ரூ.28-ல் இருந்து ரூ.32 ஆக, உயர்த்தப்படுகிறது. .எருமைப்பால் கொள்முதல் விலையும் லிட்டருக்கு ரூ.35 இருந்து ரூ.41 ஆக, அதாவது லிட்டர் ஒன்றிற்கு 6 உயர்த்தப்படுகிறது.
இதனால் அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலையும் லிட்டர் ஒன்றுக்கு ரூ.6 உயர்த்தப்படுகிறது.
இந்த விலை உயர்வு வரும் திங்கள் முதல் அமலுக்கு வரும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.