விளையாட்டு ரேஸ் கார் சக்கரத்தில் முடி சிக்கி ஹரியானா பெண் பரிதாப பலி
ஹரியானா: பொழுதுபோக்கு பூங்காவில் சிறிய ரேஸ் காரை ஓட்டும்போது அதன் சக்கரத்தில் இளம்பெண்ணின் முடி மாட்டிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானா மாநிலம் பதிண்டா பகுதியை சேர்ந்தவர் புனீத் கவுர் (28) . இவரது கணவர் அமரதீப் சிங். இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில், புனீத் கவுர் விடுமுறை நாளை தனது குடும்பத்தினருடன் கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவிற்கு சென்றுள்ளனர். அங்கு, கோ கார்ட் எனப்படும் விளையாட்டு ரேஸ் காரில் விளையாடுவதற்காக புனீத் மற்றும் அவரது கணவர் ஒரு காரிலும், மகன் மற்றும் அவரது பாட்டி ஒரு காரிலும் விளையாட்டு ரேஸ்க்கு புறப்பட்டனர்.
பயணத்தை துவங்கிய சிறிது நேரத்தில் புனீத்தின் தலை முடி காரின் சக்கரத்தில் எதிர்பாராத விதமாக சிக்கியது. கார் வேகமாக சென்றதால் அவரால் சிக்கிய முடியை எடுக்க முடியவில்லை. பின்னர், அவரது அலறல் சத்தம் கேட்டு கார் நிறுத்தப்பட்டது. காரின் வேகத்தில் முடி பலமாக சிக்கி இழுத்ததில் புனீத்த்தின் தலை தோல் பகுதியும் பெர்யத்துக்கொண்டு வந்தது.
ரத்த வெள்ளத்தில் விழுந்த புனீத்தை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அதற்குள், புனீத் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
புனீத் முறையாக ஹெல்மெட் அணிந்திருந்தும் கார் சக்கரத்தில் முடி சிக்கியதால், பூங்கா உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என புனீத்தின் குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.