ஆவின் பால் இன்று முதல் ரூ.6 உயர்வு டீ, காபி விலையும் அதிகரிப்பு
தமிழக அரசு,ஆவின் பால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் அதிகரித்துள்ளது. உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பசும்பாலுக்கு ரூ.4-ம், எருமைப்பாலுக்கு ரூ 6 -ம் அதிகரித்து விட்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கும் பாக்கெட் பாலின் விலையை ஒரேயடியாக லிட்டருக்கு 6 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு பொது மக்களிடம் கடும் அதிருப்தி நிலவுகிறது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அரசின் நிலைப்பாட்டையும் கடுமையாக விமர்சித்துள்ளன.
ஆனால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் மற்ற அமைச்சர்களும் பால் விலை உயர்வை நியாயப்படுத்தியுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், பால் கூட்டுறவு சங்கங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. கால்நடை தீவனம் உள்ளிட்டவற்றின் விலை உயர்வால் பால் உற்பத்தி செலவு அதிகரித்து விட்டது.டீசல் விலை உயர்வால், பால் கொண்டு செல்லும் செலவும் அதிகரித்து விட்டது. உற்பத்தியாளர்களின் நலன் கருதியே விலை உயர்த்தப்பட்டது. ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவித்தபடி தான் விலை உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ, அனைத்து பொருட்களின் விலைவாசி கூடி விட்டது. இதனால் பாலின் விலையும் கூடுகிறது. இதனை மக்கள் பொறுத்துத்தான் ஆக வேண்டும் என்று கூறியிருந்தார். கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜூவோ, பால் விலை உயர்வால் யாருக்கும் துன்பம் இல்லை. இதனால் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஆவின் பால் விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பாலின் விலை உயர்வால், சாதாரண சிறு, நடுத்தர டீக்கடை உரிமையாளர்களும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஏற்கனவே டீக்கடை வியாபாரம் மந்தமாக உள்ள நிலையில், பால் விலை உயர்வால் டீ, காபி விலையை ரூ.2 வரை உயர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இனால் வியாபாரம் மேலும் பாதிக்கத்தான் செய்யும் என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதே போல் பாலை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் இனிப்புகள் மற்றும் உணவுப் பண்டங்களின் விலையும் விர்ரென பறக்க வாய்ப்புள்ளது.
ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ 6 உயர்வு ; தமிழக அரசு உத்தரவு