கர்நாடகாவில் மீண்டும் மழை மேட்டூருக்கு நீர் வரத்து அதிகரிப்பு
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மீண்டும் கன மழை பெய்துள்ளதால் காவிரியில் நீர்வரத்து 33 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் 113.86 அடியாக மேட்டூர் அணை நீர்மட்டம் விரைவில் முழு கொள்ளளவை எட்டிவிட வாய்ப்புள்ளது.
கர்நாடகாவில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தொடர்ந்து பெய்த கனமழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பின. இதனால் தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 3 லட்சம் கன அடி வரை திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 5 நாட்களில் 100 அடியை எட்டியது. இதனால் அடுத்த ஓரிரு நாளில் அணை நிரம்பி விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கர்நாடகாவில் மழை குறைந்தது . தொடர்ந்து நீர் திறப்பும் சரிந்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து இன்று 113.86 அடியாக உள்ளது.
இந்நிலையில் கர்நாடகாவில் சில நாட்களாக ஓய்வெடுத்த மழை தற்போது மீண்டும் பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு ஒகேனக்கல் நீர் வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் நேற்று முன்தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 23 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் நேற்று காலை 29 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்தது. இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 33 கன அடியாக உயர்ந்துள்ளது. ஒகேனக்கல் அருவிக்கு 35 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
இதனால் அணையின் நீர்மட்டம் சற்றே உயர்ந்து 113.86 அடியாக இருக்கிறது. நீர் இருப்பு 84.01 டி.எம்.சியாக உள்ளது.
இந்நிலையில் கர்நாடகாவில் பெய்யும் மழையால் நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளதாக ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.கர்நாடகாவில் 10 முதல் 30 மி.மீ. அளவுக்கு மழை பெய்தாலும் கூட வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கும் என்றும், அணையின் நீர் இருப்பை தொடர்ந்து கண்காணித்து, நீரை வெளியேற்ற வேண்டும் என்றும் ஜல்சக்தி அமைச்சகம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் பரவலாக மழை; விவசாயிகள் மகிழ்ச்சி