கர்நாடகாவில் எடியூரப்பா அமைச்சரவை விஸ்தரிப்பு 17 பேர் பதவியேற்பு
கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்று 25 நாட்களுக்குப் பின் ஒரு வழியாக 17 பேர் அமைச்சர்களாகி, இன்று பதவியேற்றுள்ளனர். இதில் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் மட்டும் 4 பேர் அமைச்சர்களாகியுள்ளன்.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு, அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் கடந்த மாதம் கவிழ்ந்தது. இதனால் அதிருப்தி எம்எல்ஏக்கள் 17 பேரும் கட்சித் தாவல் சட்டப்படி தகுதி நீக்கத்துக்கு ஆளாகினர். இதனால் 224 பேர் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில், உறுப்பினர்கள் எண்ணிக்கை 207 ஆக குறைந்தது .இதைத் தொடர்ந்து 105 எம்எல்ஏக்கள் எண்ணிக்கையை காட்டி, பாஜக ஆட்சியமைத்தது.கடந்த மாதம் 26-ந்தேதி முதல்வராக பொறுப்பேற்ற எடியூரப்பா சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபித்தார்.
இந்நிலையில், எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்று 25 நாட்கள் ஆகியும், அமைச்சரவை பட்டியல் தயாரிப்பதில் பெரும் இழுபறி ஏற்பட்டது. ஒரு வழியாக முதற்கட்ட அமைச்சரவை பட்டியலுக்கு கடந்த சனிக்கிழமை பாஜக மேலிடத்தின் ஒப்புதலை எடியூரப்பா பெற்றார்.
இதைத் தொடர்ந்து இன்று காலை 17 பேர் கொண்ட அமைச்சர்கள் பட்டியலை ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் முதல்வர் எடியூரப்பா வழங்கினார். இந்தப் பட்டியலில் பாஜக மூத்த தலைவர்களான ஜெகதீஷ் ஷட்டர், ஈஸ்வரப்பா, ஸ்ரீராமுலு, மாதுசாமி, அசோக் ஆகியோருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 17 பேரில் ஜோலி சசிகலா அன்னா சாகேப் ஒருவர் மட்டுமே பெண் அமைச்சர் .அதே போல் 17 பேரில் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் மட்டும் 4 பேர் அமைச்சர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து இன்று காலை 11 மணியளவில் ஆளுநர் மாளிகையில் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. ஆளுநர் வஜூபாய் வாலா, 17 பேருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இன்று அமைச்சர்களாக பதவியேற்ற 17 பேரில் 16 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஆவர். குமாரசாமி அமைச்சரவையில் இடம் பெற்று ராஜினாமா செய்த சுயேட்சை எம்எல்ஏ நாகேஸ் இப்போது எடியூரப்பா அமைச்சரவையிலும் அமைச்சராகியுள்ளார்.
கர்நாடக அமைச்சரவையில் 34 பேர் வரை அமைச்சராக வாய்ப்புள்ளது. தற்போது முதற்கட்டமாக 17 பேர் அமைச்சராகியுள்ளனர்.தகுதி நீக்கத்துக்கு ஆளான காங்கிரஸ் - மஜத எம்எல்ஏக்கள் 17 பேர் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்து அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தகுதி நீக்க வழக்கில் இந்த 17 பேருக்கும் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் பட்சத்தில், இவர்களில் பெரும்பாலானோர் எடியூரப்பா அமைச்சரவையில் இடம் பெறுவது உறுதி என்றும் கூறப்படுகிறது.
கர்நாடக அமைச்சர்கள் பட்டியல் ஒரு வழியாக தயார்; முதற்கட்டமாக 15 பேர் நாளை பதவியேற்பு