ரூ.354 கோடி கடன் மோசடி கமல்நாத் மருமகன் கைது

ரூ.354 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில், மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத்தின் மருமகன் ரதுல் புரியை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. முதலமைச்சராக மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத் உள்ளார். இவரது அக்கா நீட்டா புரியின் மகனும் தொழிலதிபருமான ரதுல் புரி, ‘மோசர் பியர்’ என்ற டிவிடி தயாரிப்பு கம்பெனியில் செயல் இயக்குனராக இருந்தார். இவரது தந்தை தீபக் புரி, கம்பெனியின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார். தாய் நீட்டா புரி, சஞ்சய் ஜெயின், வினீத் சர்மா உள்ளிட்டோர் கம்பெனியின் இயக்குனர்களாக உள்ளனர்.

இந்த கம்பெனி பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று தொழில் செய்து வந்தது. இதனிடையே, இந்த கம்பெனி ரூ.354 கோடி வரை பல்வேறு வங்களிகளில் முறைகேடாக கடன் பெற்று மோசடி செய்ததாக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா புகார் கூறியது. இது தொடர்பாக, சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது.

இந்நிலையில், ரதுல் புரி மற்றும் கம்பெனி இயக்குனர்கள் வங்கிகளில் பெற்ற கடன்களை மறுவரையரை செய்வதற்காக மோசடி செய்துள்ளதாக அமலாக்கப் பிரிவும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ரதுல் புரி வீடு உள்ளிட்ட 6 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் சோதனை நடத்தி, இன்று ரதுல் புரியை கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பிரியங்கா காந்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; ஜெய்ப்பூர் கோர்ட்டில் தாக்கல்

More News >>