இண்டர்வியூவில் அசத்துவது எப்படி?

நேர்முகத் தேர்வு ஒன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தால், அந்தப் பணிக்கு நீங்கள் பொருத்தமானவரா என்று சோதிப்பதற்கு எத்தனையோ கேள்விகள் கேட்பர். கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்வது தவிர, தேர்வுக்கு வரும் பணி நாடுநர் பெரும்பாலும் கேள்விகளே கேட்பதில்லை. ஏதாவது கேட்கப் போய், இண்டர்வியூ செய்பவர் அல்லது குழுவினர் நம்மை தவறாக நினைத்து விடுவார்களோ என்ற அச்சமே, கேள்விகளை கேட்கவொட்டாமல் செய்து விடுகிறது.

இன்றைய கால கட்டத்தில், பணி நாடுநர் கேள்வி கேட்பது தவறாக பார்க்கப்படுவதில்லை. மாறாக, வேலை மீது அவர் எவ்வளவு நாட்டமாக இருக்கிறார் என்பதை தேர்வாளர்கள் புரிந்து கொள்ள வகை செய்கிறது. செய்யப் போகும் பணியை குறித்து ஓரளவு சிந்தித்து வந்திருக்கிறார் என்று பணி நாடுநர் பற்றி தேர்வாளர்கள் உயர்வாக எண்ணுவதற்கு ஏதுவாகும்.

நேர்முகத் தேர்வுக்குச் செல்பவர்கள் என்ன விதமான கேள்விகளை கேட்கலாம் தெரியுமா?இந்தப் பிரிவு அல்லது குழுவின் வாராந்தர வேலை திட்டம் அல்லது ஒரு நாளுக்கான பொதுவான வேலை என்ன?

தேர்வாளருக்கும் உங்களுக்குமிடையேயோன மௌனத்தை முறித்து, உரையாடலை ஆரம்பிக்க இந்தக் கேள்வியை கேட்கலாம். தேர்வாளர், கேள்விக்கு பதில் கூற விரும்புகிறாரா அல்லது தவிர்க்க நினைக்கிறாரா என்பதையும் இதுபோன்ற பொதுவான கேள்விகள் மூலம் புரிந்து கொள்ளலாம். இந்தக் கேள்விக்கு தேர்வு குழுவைச் சேர்ந்தவர் அளிக்கும் பதிலில், வேலை நேரம், அதிக வேலை இருக்கும் சமயம், பொதுவான வேலை ஆகியவற்றை குறித்து அறிந்து கொள்ளலாம்.

முதல் ஆறு மாதங்களில் என்னிடம் என்ன எதிர்பார்ப்பீர்கள்?இந்தக் கேள்விக்கான பதிலானது, புதிய பொறுப்பில் நீங்கள் சேர்ந்ததும் முதலில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள உதவும். புதிதாக எவையெவற்றை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும், உங்களை வழிநடத்த யாரும் இருப்பார்களா? என்பதை தெரிந்து கொள்ள உதவுவதோடு பொறுப்பை குறித்ததான உங்கள் அக்கறை இதன் மூலம் வெளிப்படும்.

நீண்ட கால இலக்குகளாக எனக்கு என்ன கொடுக்கப்படும்?குறுகிய கால இலக்குகளை தெரிந்து கொண்ட பிறகு, சற்று விரிவான சித்திரத்தை பெறுவதற்கு இந்தக் கேள்வி உதவும். உங்கள் தொழில்முறை வளர்ச்சிக்கு இந்தப் பொறுப்பு எந்த அளவுக்கு உதவிகரமாக இருக்கும், எதிர்கால முன்னேற்றத்திற்கு எவ்வளவு உதவும் என்பதை நீண்ட கால இலக்கினை கொண்டு அறிந்துகொள்ள இயலும்.

இந்தப் பொறுப்பில் எதிர்நோக்கக்கூடிய சவால்கள் என்ன?இந்தக் கேள்விக்கான பதில், பணி வரையறையில் கொடுக்கப்பட்டிருக்காது. ஒருவேளை, தேர்வாளரே கூட இதற்கான பதிலை தெரிந்து வைத்திருக்கமாட்டார். ஒருவேளை, குழு அரசியல், அந்தக் குழு சார்பாக சமாளிக்கப்பட வேண்டிய நபர் அல்லது வேலை குறித்த உண்மையான சவால்களை அவர் பட்டியலிடக்கூடும்.

இந்த நிறுவனத்தில் பணியாற்றுவதை நீங்கள் ஏன் விரும்புகிறீர்கள்?இது தேர்வாளர் எதிர்பார்க்காத ஒரு கேள்வியாக அமையக்கூடும். ஆனால், அவர் நேர்மறையாக எடுத்துக்கொண்டு பதில் கூறக்கூடிய கேள்வி இது. தேர்வாளர், நீங்கள் கேட்டவுடனே உற்சாகமாக பணி சூழல் குறித்து விவரிக்கத் தொடங்கினால் நன்று. அவர் இந்நிறுவனத்தில் பணியாற்றுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளலாம். அவர் சற்று நிதானித்து விட்டு அதிக சம்பளம் என்று காரணங்களை யோசித்து கூற ஆரம்பித்தாரானால், பணி சூழல் அவ்வளவு உகந்ததாக இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

நிறுவனத்தின் பணி பண்பாடு எப்படிப்பட்டது?

இந்தக் கேள்வி, நிறுவனத்தின் முழு பணி பண்பாடையும் அறிந்து கொள்ளவதற்காக கேட்கப்படுவது. மரபான அல்லது உயரடுக்கு சார்ந்ததான அல்லது தளர்வானதான அல்லது வேகமாக செயல்படக் கூடியதான வகையில் இந்நிறுவனம் எதைச் சேர்ந்தது என்பதை பதில் மூலம் அறிந்து கொள்ள முடியும். எல்லாவித பணி பண்பாட்டிலும் நிறைகளும் குறைகளும் உண்டு. பணிபுரியும் தன்மை உங்களுக்கு விருப்பமானதா என்பதை முடிவு செய்து கொள்ள இயலும்.

இப்பொறுப்பில் கடைசியாக வேலை செய்தவர் யார்?உங்கள் கேள்வி பட்டியலின் கடைசி கேள்வியாக இதை வைத்துக் கொள்ளலாம். இதற்கு முன்பு இப்பொறுப்பில் இருந்தவர் ஏன் விலகினார்? அவர் எவ்வளவு காலம் இப்பொறுப்பில் பணி புரிந்தார்? என்பதை இக்கேள்விக்கான பதில் மூலம் அறிந்து கொள்ளலாம். அப்பொறுப்பில் இருந்தவர் சில மாதங்கள் மட்டும் அல்லது ஓராண்டு மட்டுமே இருந்தார் என்றால் பணி சூழல் சாதகமாக இல்லை என்பதை புரிந்துகொள்ளலாம்.

More News >>