வங்கியில் ரூ.10 ஆயிரம் கோடி அபேஸ் செய்த நீரவ் மோடியிடம் ரூ. 5,100 கோடி மதிப்பில் பறிமுதல்
சட்டவிரோதமாக 10 ஆயிரம் கோடி ரூபாய் பரிமாற்றம் செய்த குஜராத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் நீரவ் மோடியிடம் இருந்து தங்கம், வெள்ளி உட்பட ரூ. 5,100 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பைக் கிளையில் மொத்தம் ரூ. 11 ஆயிரத்து 360 கோடிகள் அளவில் மோசடியாகவும், அதிகாரமற்ற முறையிலும் மோசடி நடந்து உள்ளது என வங்கியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரியான நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாயை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக தெரியவந்துள்ளது.
வைர வியாபாரியான இவர் உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் தனது நகை ஷோரூம்களை வைத்துள்ளார். முறையான தகவல்களை அளிக்காமல் 280 கோடி ரூபாய் முறைகேடாக கடன் பெற்றதாக கூறி ஏற்கெனவே அவர் மீது கடந்த ஜனவரி 29-ஆம் தேதி பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அதனடிப்படையில், ஜனவரி 31-ஆம் தேதி அவரது நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவ்விவகாரத்தில், நீரவ் மோடி அவரது மனைவி, சகோதரர் ஆகியோர் மீது ஏற்கனவே சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. வங்கியின் ஓய்வு பெற்ற துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி, மனோஜ் கரத் ஆகியோர் மீதும் மோசடி புகார் உள்ளது.
இந்நிலையில், நீரவ் மோடிக்கு சொந்தமான கீதாஞ்சலி ஜெம்ஸ் உள்ளிட்ட கடைகளில் மும்பை, குஜராத் மற்றும் புதுடெல்லி உள்ளிட்ட 17 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் இருந்து வைரம், தங்கம், வெள்ளி உட்பட ரூ. 5,100 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.