கிரிக்கெட் வீரர் ஜடேஜா, தமிழக பாடி பில்டிங் வீரர் பாஸ்கரன் உள்ளிட்டோருக்கு அர்ஜூனா விருது
ஆண்டுதோறும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும், அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சாரியா, தயான் சந்த் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, கிரிக்கெட் வீராங்கனை பூனம் யாதவ், தமிழகத்தைச் சேர்ந்த பாடி பில்டிங் வீரர் பாஸ்கரன் ஆகியோர் 2019 ஆண்டுக்கான அர்ஜுனா விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
2019-ம் ஆண்டிற்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில், இக்கட்டான சூழ்நிலையில் ரன் குவித்து இந்திய அணியை அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற வைத்ததற்காக ஜடேஜா இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
இதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த பாடி பில்டிங் வீரர் எஸ். பாஸ்கரன், மகளிர் கிரிக்கெட் வீராங்கனை பூனம் யாதவ், தடகளத்தில் தஜிந்தர் பால் சிங், முகமது அனாஸ், ஸ்வப்னா பர்மான், கால்பந்து வீரர் குர்ப்ரீத் சிங் சந்து, ஹாக்கி வீரர் சிங்லசனா சிங், துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை அஞ்சும் முட்கில், கபடி வீரர் அஜய் தாகூர் உள்ளிட்ட 19 வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது.
ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா, பாரா தடகள வீராங்கனை தீபா மாலிக் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். பாராலிம்பிக் தடகள போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை தீபா மாலிக் என்பது பேட்மிண்டன் பயிற்சியாளர் விமல் குமார், டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் சந்தீப் குப்தா, தடகள பயிற்சியாளர் மொஹிந்தர் சிங் தில்லான் ஆகியோர் துரோணாச்சார்யா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விருதுக்கு தேர்வாகியுள்ளவர்களுக்கு வரும் 29-ந் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்கி கவுரவிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.