2 மணி நேரத்தில் ஆஜராகணும்.. நள்ளிரவில் நோட்டீஸ்.. ப.சிதம்பரத்துக்கு சிபிஐ நெருக்கடி எந்நேரமும் கைதாக வாய்ப்பு
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு நெருக்கடி முற்றியுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி நேற்று செய்யப்பட்ட நிலையில், அவருடைய வீட்டில் சோதனையிட சிபிஐயும், அமலாக்கத்துறையும் மும்முரம் காட்டின.
ஆனால் ப.சிதம்பரம் வீட்டில் இல்லாததால், அடுத்த 2 மணி நேரத்தில் சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நள்ளிரவு 11.30 மணிக்கு ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ நோட்டீஸ் ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், 2004 முதல் 2014 வரை மன்மோகன் சிங் அமைச்சரவையில் உள்துறை மற்றும் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் மீதான வழக்குகளில் சிபிஐயின் நெருக்கடி முற்றியுள்ளது.
2007-ல் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய நேரடி முதலீட்டிற்கு ப.சிதம்பம் முறைகேடாக அனுமதி வழங்கினார் என்பதும், அதற்காக அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் கமிஷன் பெற்றார் என்பதும் சிபிஐயின் குற்றச்சாட்டு .இந்த வழக்கை சிபிஐ மற்றும் மத்திய அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். தந்தை, மகன் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்த சிபிஐ முயற்சித்தது.
ஆனால் இந்த வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க, கடந்தாண்டு ஜூலை முதல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் தொடர்ந்து தடை உத்தரவு பெற்று விசாரணையில் இருந்து தப்பித்து வந்தனர். இந்நிலையில் ஐஎன்எஸ் மீடியா வழக்கில், கைதுக்கான தடையை நீடிக்கக் கோரியும், முன்ஜாமீன் கோரியும் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து விட்டது. இந்த முறைகேட்டின் ஒட்டு மொத்த காரணகர்த்தாவாக ப.சிதம்பரம் திகழ்கிறார் என்பது தெரிகிறது. முறைகேட்டின் தீவிரத்தை பார்க்கும்போது, அவரை கைது செய்ய தடையை மேலும் நீடிப்பது சரியாக இருக்காது.
இத்தகைய பெரிய முறைகேட்டில் விசாரணை அமைப்புகளின் கைகளை கட்டி வைப்பது சரியாக இருக்காது என்று கூறி ப.சிதம்பரத்தின் கோரிக்கையை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுனில் கவுர் நிராகரித்து விட்டார். இதனால் ப.சிதம்பரம் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலைமை உருவானது. எனவே கைது நடவடிக்கையை தவிர்க்க ப.சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு அவசரமாக தாக்கல் செய்யப்பட்டது. மனுவை அவசரமாக உடனே விசாரிக்கவும் கோரிக்கை விடுத்ததை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. இதனால் இன்று காலை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.
உச்ச நீதிமன்றத்திலும் ப.சிதம்பரத்தின் மனு நிராகரிக்கப்பட்டால் அவர் எந்நேரமும் கைதாவார் என்ற நிலை நீடிக்கிறது. இதற்கிடையில், டெல்லி உயர் நீதிமன்றம் ப.சிதம்பரம் மீதான கைது நடவடிக்கையை நீட்டிக்க மறுத்ததாலும், முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கூறி விட்டதாலும் சிபிஐ தரப்பின் நெருக்கடி முற்றியுள்ளது. டெல்லி லோதி சாலையில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிற்கு விசாரணைக்காக சிபிஐ அதிகாரிகள் நேற்றிரவு 11.30 மணிக்கு சென்றனர்.
ஆனால் ப.சிதம்பரம் வீட்டில் இல்லாதததால் அடுத்த 2 மணி நேரத்தில் சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் ஒட்டி விட்டுச் சென்றனர். அதே போல் அமலாக்கத் துறையினரும் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த மும்முரம் காட்டி வருகின்றனர். இதனால் இன்று உச்ச நீதிமன்றம் சாதகமாக தீர்ப்பு வழங்காத பட்சத்தில், ப.சிதம்பரம் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
இதற்கிடையே, நள்ளிரவில் நோட்டீஸ் ஒட்டியதற்கும், 2 மணி நேரத்தில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ கூறியதற்கும் ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர் குர்தீப் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முறையீட்டு மனு,உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் நிலையில், அதுவரை அவகாசம் அளிக்காமல், 2 மணி நேரத்தில் ஆஜராக வேண்டும் என்று எந்த சட்டப் பிரிவின் கீழ் நோட்டீஸ் கொடுத்துள்ளீர்கள் என்று ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் சிபிஐக்கு கடிதம் அனுப்பி கேள்வி எழுப்பியுள்ளார்.