ப.சிதம்பரத்துக்கு 2 நாட்கள் நிம்மதியில்லை முன் ஜாமீன் மனு வெள்ளிக்கிழமை விசாரணை

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறவில்லை. மனு பட்டியலிடப்படாததால் இன்று விசாரணை நடைபெறுவதில் இழுபறியாகி, வெள்ளிக்கிழமை தான் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீனை நீட்டிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால் அவரை கைது செய்து விசாரணை நடத்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தீவிரம் காட்டியது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் இன்று காலை மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்றே அவசர வழக்காக விசாரிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மனு பட்டியலிடப்படாததை காரணம் காட்டி, விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா மறுப்பு தெரிவித்து விட்டார். மேலும் விசாரணை தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அணுகுமாறும் என்.வி.ரமணா கூறி விட்டார். ஆனால் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்,அயோத்தி ராமர் கோயில் இடம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் விசாரணை மேற்கொண்டிருந்தார். இதனால் அந்த வழக்கு விசாரணை முடிந்த பின், தலைமை நீதிபதியிடம் முறையிட ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் காத்திருந்தனர்.

ஆனால், அயோத்தி வழக்கு முடிந்ததும் அரசியல் சாசன அமர்வு கலைந்து சென்றது. இதனால், ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்விப்படவில்லை. நாளை மறுநாள் தான் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள பட்டியலிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ப.சிதம்பரத்தின் மேல் முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்காததால், அவரை கைது செய்ய சிபிஐ தரப்பில் மீண்டும் மும்முரமாக இறங்கியுள்ளனர். அவர் வெளிநாடு தப்பிச் செல்ல முடியாதபடிக்கு லுக்அவுட் நோட்டீசையும் அமலாக்கத்துறை பிறப்பித்துள்ளது. எனவே ப.சிதம்பரம் எந்நேரமும் கைது செய்யப்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

More News >>