ப.சிதம்பரம் கைது : லோக்கல் போலீஸ் போல் சிபிஐ நடந்து கொண்டது முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன்

ப.சிதம்பரம் கைது நடவடிக்கையில் சிபிஐ நடந்து கொண்ட முறை என் சர்வீசில் நான் பார்க்காத ஒன்று. லோக்கல் போலீஸார்தான் இப்படி நடப்பார்கள்.இந்திரா காந்தியை கைது செய்த போது கூட இப்படி நடக்கவில்லை என முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் தெரிவித்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரத்தை ஒரு வழியாக சிபிஐ கைது செய்துள்ளது. நேற்றிரவு அவரை கைது செய்த போது சிபிஐ தரப்பு அரங்கேற்றிய பரபரப்பு காட்சிகள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது என்றே கூறலாம். பல ஆண்டு காலம் உள்துறை, நிதி என மத்திய அமைச்சர் பொறுப்பு வகித்த ஒரு மூத்த அரசியல்வாதியை, சுவர் ஏறிக் குதித்து கைது செய்த சம்பவம், பல தரப்பிலும் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. ப.சிதம்பரத்தை வேட்டையாட சிபிஐ காட்டிய அவசரத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிபிஐயின் இந்த நடவடிக்கை குறித்து முன்னாள் சிபிஐ அதிகாரியும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கிய விசாரணை அதிகாரியாக இருந்தவருமான ரகோத்தமன் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், என்னுடைய சிபிஐ சர்வீசில் எத்தனையோ வழக்குகளை பார்த்துள்ளேன் முன் ஜாமீன் வழக்கில் 3 நாள் அவகாசம் என்ற நிலையில் இவ்வாறு கைது செய்ய மாட்டார்கள். விசாரணைக்காக சம்மன் கொடுத்த போதெல்லாம் ப.சிதம்பரம் ஆஜராகி வந்துள்ளார். 2 ஆண்டுகளாக தவறாமல் ஆஜராகி வந்தவர் 2 மணி நேரத்தில் எங்கும் ஓடிப்போய் விட மாட்டார்.

தற்போது ப.சிதம்பரத்தை கைது செய்ய மேற்கொண்ட நடவடிக்கையைப் போல் சிபிஐ எந்தக் காலத்திலும் செய்ததில்லை. இந்திரா காந்தியை கைது செய்தபோது கூட இப்படி நடந்ததில்லை.

இந்திரா காந்தியை கைது செய்யும்போது அவருக்கு உடனடியாக பெயில் வழங்க சிபிஐ முன்வந்தது. ஆனால் அப்போது அங்கிருந்த சஞ்சய் காந்தியோ, நீங்கள் வந்தது கைது செய்யத்தானே; கைது செய்யுங்கள் என வற்புறுத்தியதால் கைது செய்தோம்.பின்னர் சிபிஐ நீதிமன்றத்தில் இந்திரா காந்தியின் பெயிலுக்கு ஆட்சேபனை தெரிவிக்க வில்லை. இதனால் அவர் விடுவிக்கப்பட்டார்.

தற்போது ப.சிதம்பரம் மீதான வழக்கில், முன் ஜாமீன் மனு மீதான விசாரணைக்கு உச்ச நீதிமன்றத்தில் 3 நாள் அவகாசம் இருந்தது. இந்நிலையில் சிபிஐ இவ்வளவு அவசரமாக செயல்பட்டு கைது செய்துள்ளது நான் எதிர்பார்க்காத ஒன்று. லோக்கல் போலீசார் தான் இப்படியெல்லாம் நடந்து கொள்வார்கள் என ரகோத்தமன் தெரிவித்துள்ளார்.

உடனடி முன்ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு; ப.சிதம்பரத்துக்கு சிக்கல் நீடிப்பு

More News >>