நம்ம ஊரு சென்னை... இன்று வயது 380... சில சுவாரஸ்ய தகவல்கள்
சென்னைக்கு இன்று வயது 380 ஆகிறது. 1639 -ம் ஆண்டு இதே நாளில் இன்றைய சென்னைக்கு சென்னப்பட்டினம் என்றும், மதராசபட்டினம் என்றும் பெயர் சூட்டப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. சென்னை உருவான கதை பற்றிய சில சுவாரஸ்யங்களை காண்போம்:
இந்தியாவின் முதல் மாநகராட்சி என உருவெடுத்த பழமையான நகரம் தான் சென்னை. உலகின் பழமையான இரணடாவது மாநகராட்சி என்ற சிறப்பும் சென்னைக்கு உண்டு. உலகின் முதல் மாநகராட்சி இங்கிலாந்தின் தலைநகரமான பழமை வாய்ந்த லண்டன் மாநகரம் ஆகும்.
அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்களின் இந்திய வணிகத் தலைநகரமாக விளங்கியது சென்னை. பழமையின் சுவடுகள் மாறாமல் காலத்துக்கேற்ற புதுமைகளைத் தாங்கி, தற்போது கம்பீரமாய் நிற்கிறது, வந்தோரை வாழவைக்கும் இம்மாநகரம். 400 வருடங்களுக்கு முன்னர் சின்னஞ் சிறு கிராமங்களாக பிரிந்து கிடந்ததுதான் தற்போது இருக்கும் சிங்காரச் சென்னை மாநகரம்.
தற்போதைய சென்னையின் கடற்கரை ஒட்டிய பகுதி 380 ஆண்டுகளுக்கு முன்னர் வெங்கடப்ப நாயக்கர் என்பவரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1639-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ம் நாள் கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாக பிரான்சிஸ் டே மற்றும் ஹென்றி ஹோகன் இருவரும் இணைந்து இந்தப் பகுதியை வாங்கியுள்ளனர்.16 ஆயிரம் வராகன் கொடுத்து வாங்கிய கடற்கரையை ஒட்டிய பகுதியில், தற்போது தலைமைச் செயலகமாக உள்ள ஜார்ஜ் கோட்டையைக் கட்டி வணிக மையமாக மாற்றினார்கள்.மதராஸ பட்டணத்தின் சிறு பகுதியை வெங்கட நாயக்கரிடமிருந்து பிரான்சிஸ் டே வாங்கிய இந்த நாளைத்தான் 'சென்னை தினம்' என இன்று கொண்டாடுகிறோம்.
பொதுவாக சென்னையின் பெயர் காரணமாக பல கதைகள் சொல்லப்படுகின்றன. பிரான்ஸிஸ் டே வாங்கிய நிலத்திற்கு அருகில் சில மீனவ குடும்பத்தினரும், பிரெஞ்சு கத்தோலிக்க பாதிரியார்களும் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்தக் கிராமத்தின் ரோமன் கத்தோலிக்க தலையாரியின் பெயர் மதராசன் என்றும், அந்த நபரின் பெயரை வைத்தே, 'மதராஸ்பட்டினம்' என்ற பெயர் நிலவி வந்ததாகவும் கூறப்படுகிறது. மதராஸ்பட்டினம் என்ற பெயர் வர, வேறு காரணம் கூறுபவர்களும் இருக்கிறார்கள்.
சாந்தோமில் வசித்து வந்த போர்ச்சுக்கீசியர்களின் ‘மாத்ரா’ என்னும் செல்வாக்குமிகு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பிரான்ஸிஸ் டே காதல் வயப்பட்டிருந்தார். தனது காதலியின் குடும்பப் பெயரை வைத்தே இந்த பெயர் சூட்டப்பட்டதாகவும் கதைகள் உலவுகின்றன.மாதரசன் பட்டினம் தான் மதராஸ் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவிரி பட்டினத்திற்குப் பக்கத்தில், பெண்ணேஸ்வரம் கிராமத்தில் உள்ள பாறையின் கல்வெட்டில் சென்னையைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. அந்தக் கல்வெட்டு கி.பி 1369-ம் ஆண்டில் வெட்டப்பட்டது. இந்தக் கல்வெட்டில் கடற்கரை பட்டினங்களான கோவளம், நீலாங்கரையான் பட்டினம், மாதரசன் பட்டினம் என குறிப்பிடப்பட்டுள்ளன.
சென்னைப்பட்டினம் என்கிற ஒப்பந்தம் ஏற்படுவதற்கு 50 வருடத்திற்கு முன்பே டச்சுக்காரர்களால் மதராஸ் என்று சொல்லப்பட்டது. இதை நிரூபிக்கும் விதமாக இந்தக் கல்வெட்டு அமைந்திருக்கிறது. மாதரசன் பட்டினத்தை ஆங்கிலேயர்கள் தங்களின் உச்சரிப்புக்கு வசதியாக ’மதராஸ்’ என்று அழைத்தார்கள் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மாதரசன் பட்டினத்தின் சிறு பகுதியை வாங்கியதற்கான ஒப்பந்தம், இன்றும் சென்னை மியூசியத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
1996-க்கு முன்பு வரை சென்னையின் அதிகாரப்பூர்வ பெயராக 'மெட்ராஸ்' என்றே இருந்து வந்தது. 1996-ல் கருணாநிதி முதல்வராக இருந்த போது மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என்று மாற்றினார். அது முதல் சென்னை என்றே அழைக்கப்பட்டு வரும் நம் சிங்காரச் சென்னைக்குத் தான் இன்று வயது 380. சிறு, சிறு கிராமங்களாக இருந்த பல கிராமங்கள், கால மாற்றங்களால், ஓங்கி உயர்ந்த கட்டிடங்களால் இன்று பெரு நகரமாக உருமாறியுள்ளது.வரும் காலங்களிலும் சென்னை மேலும் பல மாற்றங்களை காணப் போவதும் உறுதி . வாழ்க நம்ம சென்னை!
ஆவின் பால் விலயை உயர்த்தியது ஏன்? முதலமைச்சர் விளக்கம்