சிதம்பரத்தை நம்பாத சிபிஐ, மகளை கொன்றவரை நம்பும்: காங்கிரஸ் காட்டம்
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2007ல் மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜியின் ஐ.என்.எக்ஸ். மீடியா கம்பெனிக்கு மொரிசியஸ் கம்பெனிகளில் இருந்து முறைகேடாக ரூ.305 கோடி அன்னிய முதலீடு வந்தது. அப்போது அந்த விதிமீறல்களை நிவர்த்தி செய்து, அந்த முதலீட்டுக்கு அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியம்(எப்.ஐ.பி.பி) ஒப்புதல் அளித்தது. அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், விதிகளை மீறி இ்ப்படி ஒப்புதல் அளிக்கச் செய்தார். இதற்காக அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் அட்வான்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக் கன்சல்டிங் கம்பெனிக்கு 10 லட்சம் டாலர் லஞ்சமாக இந்திராணியின் ஐ.என்.எக்ஸ். கம்பெனி கொடுத்தது என்பதுதான் அந்த வழக்கு.
சி.பி.ஐ. அதிகாரிகள் சிதம்பரத்தின் டெல்லி வீட்டுக்கு சென்று சுவர் ஏறி குதித்து அவரை கைது செய்தனர். இதற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வதேரா, ராகுல்காந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா இன்று பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சொந்த மகளை கொலை செய்த வழக்கில் சிக்கி, சிறையில் இருப்பவர் இந்திராணி முகர்ஜி .
அவரது வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சிதம்பரத்தை கைது செய்துள்ளனர். சொந்த மகளை கொன்றதாக வழக்கை சந்திக்கும் குற்றவாளியின் பேச்சை நம்பும் சிபிஐ, சிதம்பரத்தின் வாதத்தை ஏற்க மறுக்கிறது. இந்திராணியின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு மூத்த அரசியல் தலைவரை கைது செய்திருப்பது அபத்தமானது.
சிதம்பரம், அவரது மகன் கார்த்தி ஆகியோரின் பெயர்களில் எந்த எப்.ஐ.ஆரும் போடாத சமயத்தில் 4 முறை அவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தினார்கள். 20 முறை சம்மன் அனுப்பினார்கள். எனவே, பாஜக பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.இவ்வாறு ரன்தீப் சுர்ஜிவாலா கூறினார்.
சிபிஐ துரத்தல்... ப.சிதம்பரம் தலைமறைவாகி விட்டார்; சு.சாமி கிண்டல்