சிபிஐயின் செயல்பாடு, நாட்டிற்கே அவமானம் ஸ்டாலின் கண்டனம்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது குறித்து ஸ்டாலின் கூறுகையில், ‘‘சி.பி.ஐ. அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து சென்று சிதம்பரத்தை கைது செய்தது நாட்டிற்கே அவமானம்’’ என்று கண்டனம் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் சிதம்பரம், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். முன்னதாக, அவரது முன் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. அடுத்த சில மணி நேரத்தில் சிபிஐ அதிகாரிகள், சிதம்பரத்தை தேடத் தொடங்கினர். அவர் வீட்டுக்கு 3 முறை வந்து சென்றனர். அந்த சமயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினிடம் நிருபர்கள் கருத்து கேட்ட போது, ‘‘சிதம்பரம் சட்ட நிபுணர், சட்டரீதியாக அதை சந்திப்பார்’’ என்றார்.
அதன்பிறகு, நேற்றிரவு சிதம்பரம் கைதான போது ஸ்டாலின் உடனடியாக எந்த கண்டன அறிக்கையும் விடவில்லை. மத்திய உள்துறை அமைச்சராக சிதம்பரம் இருந்த போதுதான், 2ஜி ஊழல் வழக்கில் திமுகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதனால்தான், ஸ்டாலின் இப்போது மவுனம் காக்கிறார் என்றெல்லாம் கூட சமூக ஊடகங்களில் கருத்து பரவத் தொடங்கியது.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காஷ்மீர் விவகாரம் நடக்கும்போது மத்திய அரசை கண்டித்து டெல்லியில் நாங்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். சிதம்பரத்தின் வீட்டிற்குள் சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து சென்று கைது செய்தது இந்திய நாட்டிற்கே அவமானம். இந்த செயலை நான் கண்டிக்கிறேன். சிதம்பரத்தை கைது செய்திருப்பது பழிவாங்கும் நடவடிக்கை.
உள்ளாட்சி தேர்தல் நடத்தாததற்கு நாங்கள் காரணமே இல்லை. அந்த தேர்தலை நடத்தக் கூடாது என்று நாங்கள் வழக்கு போடவில்லை. அதை புரிந்து கொள்ள வேண்டும். அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர், அவருடைய பேச்சுக்கு எல்லாம் என்னிடம் கருத்து கேட்காதீர்கள். என்னால் பதில் கூற முடியாது என கூறினார்.
காஷ்மீர் விவகாரத்தில் பாக்., சீனாவுக்கு மூக்குடைப்பு ; ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கைவிரித்தது