படர் தாமரை பாதிப்புக்கு ஆன்ட்டிபயாட்டிக் சாப்பிடலாமா?

சருமத்தில் 'படர் தாமரை' வந்தால் சமுதாயத்தில் மற்றவர்களுடன் பழகுவதற்கு மிகவும் சங்கடமாகி விடுகிறது. ஆங்கிலத்தில் 'ரிங்வார்ம்' என்று கூறினாலும், படர் தாமரை பல்வேறு வடிவங்களில் காணப்படுகிறது. படர் தாமரையை பற்றி பல்வேறு தவறான நம்பிக்கைகள் நிலவி வருகிறது.

என்னென்ன வடிவில் வரும்?

படர் தாமரையை சிலர் வேறு பாதிப்பென்று தவறான எண்ணிவிடக்கூடும். உதாரணமாக, சவரம் செய்யும் இடத்தில் வரும் தேமல் போன்ற பாதிப்பு, பலர் நினைப்பதுபோல் பூச்சியால் ஏற்படுவதில்லை. அது, தாடை படர்தாமரை ஆகும். முகத்தோடு தலை, பாதம், அந்தரங்க பாகங்கள் என எல்லா இடங்களிலும் படர் தாமரை பாதிப்பு உண்டாகலாம்.

யாரையெல்லாம் பாதிக்கும்?

பலர், படர் தாமரை குழந்தைகளை மட்டுமே பாதிக்கும் என நினைக்கின்றனர். ஆனால், எந்த வயதினருக்கும் படர் தாமரை பாதிப்பு ஏற்படக்கூடும்.

காரணம் என்ன?

ஆங்கிலத்தில் 'ரிங்வார்ம்' என அழைக்கப்படுவதால், பலர் இது ஏதோ ஒரு வித புழுக்களால் வரும் பாதிப்பு என எண்ணுகின்றனர். ஆனால், டெர்மெட்டோபைட்ஸ் என்ற ஒரு வித பூஞ்சைகளால் இப்பாதிப்பு ஏற்படுகிறது. சருமத்தில் சிவப்புப் புள்ளிகள் வட்டம் வட்டமாக வளையம்போல் காணப்படும்.

ஒருவருக்கு தலையில் படர் தாமரை பாதிப்புண்டானால், வளையம் போன்று புள்ளிகள் உருவாகாமல் பொடுகினால் உண்டான பாதிப்பு போன்று காணப்படும். ஆகவே, தலையில் படர் தாமரை உண்டானால், பொடுகு என்று தவறாக எண்ணிவிடவும் வாய்ப்புண்டு.

எதிர் உயிரிகள் வேலை செய்யுமா?

படர் தாமரை பாதிப்பு ஏற்பட்டால் 'ஆன்ட்டிபயாட்டிக்ஸ்' என்னும் எதிர் உயிரி மருந்துகளை சாப்பிட்டால் குணமாகி விடும் என்று பலர் எண்ணுகின்றனர். படர் தாமரை, பூஞ்சையினால் வரும் பாதிப்பு என்பதால், பூஞ்சைகளை அழிக்கக்கூடிய மருந்து தேவைப்படும். ஆன்ட்டிபயாட்டிக்ஸ், பாக்டீரியாக்களை மட்டுமே அழிக்கக்கூடியது. செல்லப் பிராணிகளிடமிருந்து படர் தாமரை பரவலாம்; மனிதர்களிடமிருந்தும் மிருகங்களுக்கு பரவக்கூடும்.

More News >>