எதிரிக்கும் உதவி.. கேரள முதல்வரின் மாநிலப்பற்று, மனித நேயத்துக்கு பாராட்டு

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் காங். தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டவர் துஷார் வெள்ளப்பள்ளி . இவர் செக் மோசடி தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு சட்டத்துக்கு உட்பட்டு வேண்டிய உதவி செய்ய வேண்டுமென மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

அரபு நாட்டில், அதுவும் மோசடி வழக்கில் சிக்கியவரோ எதிரியான பாஜக கூட்டணியின் முக்கியப் புள்ளி. ஆனாலும் தமது மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக, அவருக்காக பினராயி விஜயன் குரல் கொடுத்துள்ளது, அவருடைய மாநிலப் பற்றையும், மனிதாபிமானத்தையுமே காட்டுகிறது என பாராட்டுகளை பெற்றுள்ளார்.

கேரளாவில் பாரத் தர்ம ஜனசேனா என்ற அமைப்பின் தலைவராக இருப்பவர் துஷார் வெள்ளப்பள்ளி. இவர் பாஜக தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கேரள மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலும் உள்ளார். மேலும் பிற்படுத்தப்பட்ட ஈழவ சமுதாயத்திற்காக ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகன் என்ற அமைப்பின் துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார்.

கடந்த மக்களவைத் தேர்தலின் போது வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் துஷார் வெள்ளப்பள்ளி போட்டியிட்டு தோல்வியும் அடைந்தார்.

துஷார் வெள்ளப் பள்ளியின் தந்தை நடேசன் பல ஆண்டுகளாக ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அஜ்மானில் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். தந்தை நடத்தி வந்த தொழிலை அவருக்குப் பின் துஷார் தொடர்ந்து நடத்தி வந்துள்ளார்.கடந்த10 வருடங்களுக்கு முன், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கட்டுமான நிறுவனத்தையே வேறொருவருக்கு விற்றுவிட்டு துஷார் வெள்ளப்பள்ளி கேரளாவுக்கு திரும்பி விட்டார்.

தமது நிறுவனத்தை விற்று விட்டு வெளியேறும் போது, அரபு எமிரேட்சில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த நஸில் அப்துல்லா என்பவருக்கு ரூ.19 கோடி துஷார் தரவேண்டியது இருந்துள்ளது.இதற்காக செக் ஒன்றை துஷார் வெள்ளப்பள்ளி கொடுத்துள்ளார். ஆனால் வங்கிக் கணக்கில் பணமில்லாததால் செக் திரும்பி வந்தது. இதனால் துஷாரிடம் பணம் கேட்டு நஸில் அப்துல்லா தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் இந்தப் பிரச்னையில் பேசித் தீர்க்கலாம் என துஷார் வெள்ளப்பள்ளியை அரபு எமிரேட்ஸ்க்கு வரவழைத்த நஸில் அப்துல்லா, அவரை அந்நாட்டு போலீசில் சிக்க வைத்து விட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட துஷார் வெள்ளப்பள்ளி இப்போது அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.துஷார் வெள்ளப்பள்ளி அரபு எமிரேட்சில் கைது செய்யப்பட்ட விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், துஷார் வெள்ளப்பள்ளி கைது செய்யப்பட்டது குறித்து மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது. அங்கு சிறையில் உள்ள அவருடைய உடல் நலம் பற்றி கவலைப்பட வேண்டியுள்ளது. இந்த விஷயத்தில் வெளியுறவு அமைச்சகம் தலையிட்டு, சட்டத்திற்கு உட்பட்டு, துஷார் வெள்ளப்பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் என பினராயி விஜயன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக கூட்டணியைச் சேர்ந்தவர் என்றாலும் கேரளத்தவர் என்ற மனிதாபிமான அடிப்படையில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், உதவி செய்யுமாறு வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் எழுதியிருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.

More News >>