ப.சிதம்பரத்துக்கு திங்கட்கிழமை வரை சிபிஐ காவல் சிறப்பு நீதிமன்றத்தில் பரபரப்பாக நடந்த வாதம்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிஐ தரப்பிலும், ப.சிதம்பரம் தரப்பிலும் 90 நிமிடத்துக்கு மேல் கடும் வாதம் நடைபெற்றது.இறுதியில் வரும் திங்கட்கிழமை வரை ப சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், நேற்றிரவு கைது செய்யப்பட்டார். இரவு முழுவதும் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டார். இன்று காலை முதல் அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் இன்று பிற்பகல், ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி அஜய்குமார் முன்னிலையில், ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.

அப்போது, ப.சிதம்பரம் சார்பில், கபில்சிபல், அபிஷேக் சிங்வியும், சிபிஐ சார்பில் துஷார் மேத்தாவும் ஆஜரானார்கள். சிபிஐ தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதாடுகையில்விசாரணைக்கு ப.சிதம்பரம் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. கேள்விகளுக்கும் பதிலளிக்க மறுக்கிறார். எனவே மேலும் விசாரணை நடத்த 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதற்கு ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் எதிர்ப்பு தெரிவித்தார்.அவர் வாதிடுகையில், ப.சிதம்பரத்திற்கு எதிராக நேரடியான குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை. இந்த வழக்கில், பாஸ்கர ராமன், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ப.சிதம்பரத்திடம் ஏற்கனவே விசாரணை முடிந்து விட்டதால், காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. சம்மன் அனுப்பப்ப்பட்ட போதெல்லாம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை முன் ப.சிதம்பரம் ஆஜரானார்.

இந்த வழக்கில் ஏற்கனவே கேட்ட கேள்விகளைத் தான் கேட்டுள்ளனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அரசு விரும்புகிறது. இந்த வழக்கு ஆதாரங்கள் அடிப்படையில் நடக்கவில்லை. வேறு எதற்காகவோ நடக்கிறது.வலுவான ஆதாரங்கள் இருப்பதாக கூறும் சிபிஐ, இத்தனை நாள் அதனை வைத்து என்ன செய்தார்கள் என்று கபில் சிபல் வாதிட்டார்.

பின்னர் அபிஷேக் சிங்வியும் ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக வாதிட்டார். ப.சிதம்பரத்திடம், நீதிபதியே தேவையான கேள்விகளை கேட்கலாம். இதற்கு சிதம்பரத்தை பேச அனுமதிக்க வேண்டும் என்றார்.

இதைத் தொடர்ந்து, நீதிபதியிடம் ப.சிதம்பரம், பேச அனுமதி கேட்டார். இதற்கு சிபிஐ வழக்கறிஞர் துஷார் மேத்தா எதிர்ப்பு தெரிவித்தார். , இதனால் 90 நிமிடங்களுக்கு மேல்இரு தரப்பிலும் பரபரப்பான வாதம் நடைபெற்றது.

இரு வாதங்களை கேட்ட நீதிபதி, இறுதியில் ப. சிதம்பரத்தை வரும் 26-ந்தேதி வரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்தார். மேலும், ப.சிதம்பரத்தை அவரது குடும்பத்தினர் தினமும் 30 நிமிடம் சந்திக்கவும் அனுமதி வழங்கினார். அத்துடன் அவருக்கு போதிய மருத்துவ உதவிகள் வழங்க வேண்டும் எனவும், அவருடைய கவுரவத்திற்கு மரியாதைக்குறைவு இல்லாத வகையில் விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டார். சிபிஐ காவல் முடிந்து, ப.சிதம்பரத்தை மீண்டும் வரும் 26-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

More News >>