லஷ்கர் தீவிரவாதிகள் ஊடுருவல்... உளவுத்துறை எச்சரிக்கை.. கோவையில் உச்சகட்ட கண்காணிப்பு

தமிழகத்தில் பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவிருப்பதாக வந்த தகவலை அடுத்து, மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதிகள் கோவையை குறிவைக்கலாம் என்பதால் அந்நகரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்துக்குள் லஷ்கர் இயக்க பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவியிருப்பதாக தமிழக போலீசாருக்கு, மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை வழியாக இந்த பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாகவும், குண்டு வெடிப்பு போன்ற நாச வேலைகளில் ஈடுபடலாம் என்றும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதையடுத்து மாநிலம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறுஅனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும், மாநகர கமிஷனர்களுக்கும் டிஜிபி திரிபாதி அவசர உத்தரவிட்டுள்ளார். இதனால் நேற்று நள்ளிரவு முதலே தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு முக்கிய இடங்களில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் கோவையை குறிவைக்கலாம் என்றும், எனவே அங்கு கூடுதல் எச்சரிக்கையாக இருக்குமாறும் உளவுத்துறை கூறியதையடுத்து, கோவை மாநகரம் முழுவதும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு

More News >>