குறுக்கு வழியில் எடியூரப்பாவை முதல்வராக்கிய பா.ஜ.க ஊழல் பற்றி பேசலாமா? எஸ்டிபிஐ கேள்வி
ஊழல் புகழ் எடியூரப்பாவை குறுக்கு வழியில் முதல்வராக்கிய பாஜகவுக்கு ஊழல் பற்றி பேச அருகதை உண்டா? என்று தெஹ்லான் பாகவி கேட்டுள்ளார்.
எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி வெளியிட்ட அறிக்கையி்ல் கூறியிருப்பதாவது:
சுவர் ஏறி குதித்த சி.பி.ஐ அதிகாரிகளால் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கைது செய்வதில் இவ்வளவு அவசரம் ஏன்? ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்றால் லலித் மோடி, நீரவ் மோடி, விஜய் மல்லையா விவகாரத்தில் மோடி அரசின் லட்சணம் என்ன? கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற நடந்த முறைகேடுகளை நாடறியும். எடியூரப்பா மற்றும் ரெட்டி சகோதரர்களுக்கு எதிரான நவடிக்கைகள் என்ன ஆனது? ஊழல் புகழ் எடியூரப்பாவை குறுக்கு வழியில் முதல்வராக்கிய பாஜகவுக்கு ஊழல் பற்றி பேச அருகதை உண்டா?
10 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய உள்துறை அமைச்சர் அமித்ஷா போலி என்கவுண்டர் வழக்கில் கைதுசெய்யப்பட்ட போது, அன்று உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார். அது மட்டுமின்றி சம் ஜவ்தா எக்ஸ்பிரஸ், மலேகான் உள்ளிட்ட குண்டு வெடிப்பு வழக்குகளில் சங்பரிவார் அமைப்புகளுக்கு எதிரான விசாரணயும், கைதுகளும் நடைபெற்ற போது அது போதுமான நடவடிக்கையாக இல்லா விட்டாலும் அதற்கான பழிவாங்கும் நடவடிக்கையே இது என சொல்லப் படுவதை புறக்கணிக்க முடியாது.
நாட்டின் பொருளாதார பின்னடைவையும், காஷ்மீர் பிரச்சனையையும் திசை திருப்புவதும் இந்த கைதின் மூலம் பா.ஜ.க எதிர்பார்த்திருக்கலாம்? முதுகெலும்பற்ற சில ஊடகங்களும், நீதிமன்றங்களும் அரசின் நடவடிக்கைகளுக்கு துணை போகின்றன என்பதில் உண்மையில்லாமல் இல்லை. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாறுபாடில்லை. தலைமறைவாக, அல்லதுவெளிநாட்டிற்கு தப்பிசெல்ல வாய்ப்பில்லாத ப.சிதம்பரம் விஷயத்தில் காட்டப்படும் இந்த அவசரங்களில் உள்நோக்கம் இல்லாமல் இல்லை. சிதம்பரம் மீது நமக்கு மாறுபட்ட பல கருத்துகள் இருப்பினும் இத்தகைய நடவடிக்கைகள் கடும் கண்டனத்திற்குரியது.
இவ்வாறு தெஹ்லான் பாகவி கூறியுள்ளார்.
அன்று விருந்தாளி, இன்று ஊழல் கைதி; அதே சி.பி.ஐ. அலுவலகம்