ப.சிதம்பரத்தின் மேல் முறையீட்டு மனு திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு, டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு வருடத்திற்கு மேலாகவே முன் ஜாமீன் வழங்கி வந்தது.இந்நிலையில் கடந்த செவ்வாயன்று முன் ஜாமீனை திடீரென ரத்து செய்து விட்ட டெல்லி உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக போதிய முகாந்திரம் இருப்பதாகவும் கூறி விட்டது.இதைத் தொடர்ந்து ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தீவிரம் காட்டியது.
இதனால் அவசரமாக உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் கடந்த புதன்கிழமை மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் மனு பட்டியலிடப்படவில்லை என்ற காரணத்தைக் கூறி நீதிபதி ரமணா வழக்கை விசாரிக்க மறுத்தார். அன்று முழுவதும் ப.சிதம்பரம் தரப்பில் பெரும் முயற்சிகள் எடுத்தும் வழக்கு விசாரணைக்கு வராமல், வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெறும் என்று பட்டியலிடப்பட்டது.
இதனால் புதன்கிழமை இரவே ப.சிதம்பரம் அவருடைய அவருடைய வீட்டில் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். தற்போது ப.சிதம்பரத்தை சிபிஐ காவலில் எடுத்து விசாரணை செய்ய சிறப்பு நீதிமன்றம் அனுமதி கொடுத்த நிலையில், விசாரணை வளையத்தில் உள்ளார்.
இந்நிலையில் முன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பானுமதி, போபண்ணா ஆகியோர் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரிக்க தொடங்கியதுமே, சிபிஐ தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ப.சிதம்பரம் சிபிஐயால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டதால் இந்த மேல்முறையீட்டு மனு செல்லாது என வாதிடப்பட்டது.
இதனை ஏற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஐஎன்எக்ஸ் மீடியாக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஏற்கனவே 26-ந்தேதி வரை காவலில் விசாரிக்க அனுமதி கொடுத்துள்ளது. எனவே அதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை 26-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
அடுத்தது ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு; சுப்பிரமணிய சாமி பேட்டி