உருவப்படத்தை தொடர்ந்து முழு உருவச்சிலை.. ஜெ.பேரவை கூட்டத்தில் தீர்மானம்
சென்னை: நாடாளுமன்றத்திலும், தமிழக சட்டமன்ற வளாகத்திலும் ஜெயலலிதாவின் முழு உருவ சிலை அமைத்து திறக்க வேண்டும் என ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டமன்றத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படம் திறக்க முடிவு செய்யப்பட்டது. சொத்து குவிப்பு வழக்கு குற்றவாளியின் புகைப்படம் சட்டமன்றத்தில் வைக்கக்கூடாது என எதிர்கட்சிகள் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்தனர்.
இருப்பினும் பல எதிர்ப்புகளையும் மீறி, ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டது.இந்நிலையில், ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை, நாடாளுமன்றத்திலும், தமிழக சட்டமன்றத்திலும் அமைக்க ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஜெயலலிதா பேரவை ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. முதல்வர் பழனிச்சாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கூட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில், பல்வேறுத் துறை அமைச்சர்களும், செயலாளர்களும் கலந்துக் கொண்டனர்.
கூட்டத்தின்போது, ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஆண்டு முழுவதும் மக்களின் நல்வாழ்வு தினமாக கொண்டாடவும், நலத்திட்ட உதவிகள் வழங்கவும், புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும், அதிமுக தலைமை கட்டிடத்திற்கு அம்மா அன்பு மாளிகை என பெயரிடவும், தமிழக சட்டமன்ற வளாகம் மற்றும் நாடாளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலை திறக்க வேண்டும் என்றும், இதற்காக முதல்வரும், துணை முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.