கர்நாடகாவில் உடைகிறது காங்கிரஸ்-ம.ஜ.த. கூட்டணி எடியூரப்பா மகிழ்ச்சி

கர்நாடகாவில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி உறவில் நாளுக்கு நாள் விரிசல் அதிகமாகி வருவதால், கூட்டணி விரைவில் முறியும் என தெரிகிறது. இதனால், குறைந்த மெஜாரிட்டியில் ஆட்சியமைத்துள்ள எடியூரப்பா மகிழ்ச்சியடைந்துள்ளார்.கர்நாடகாவில் கடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றிருந்தாலும், மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

அப்போது காங்கிரசும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் கூட்டணி சேர்ந்து ஆட்சியை கைப்பற்றின. 40 தொகுதிகளுக்கும் குறைவாக வென்றிருந்த ம.ஜ.த. கட்சியின் தலைவர் குமாரசாமியே முதல்வராக பொறுப்பேற்றார். காங்கிரசில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு அது பிடிக்கவில்லை. இருந்தாலும், சோனியா மற்றும் ராகுல்காந்தியின் முடிவுக்கு கட்டுப்பட்டு ஏற்றுக் கொண்டார். ஆனால், குமாரசாமி ஆட்சியில் அவர் அமைச்சர் பொறுப்பு ஏற்கவில்லை.

இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கட்சியின் 13 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக மாறி, பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. இதன்பிறகு, எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது. குறைந்த மெஜாரிட்டியில் ஆட்சி அமைத்துள்ள எடியூரப்பா அரசு எத்தனை நாள் தாக்குப் பிடிக்குமோ என்று பேசப்பட்டு வந்தது. இதனால், அமைச்சர்களை கூட தீர்மானிக்க முடியாமல் 22 நாட்களை கடத்திய முதல்வர் எடியூரப்பா, கடைசியாக கடந்த 2 தினங்களுக்கு அமைச்சர்களை நியமித்தார்.

இதற்கிடையே, குமாரசாமி ஆட்சி கவிழ்ந்ததற்கு சித்தராமையாவே காரணம் என்று குமாரசாமியின் தந்தையான முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறினார். ‘‘சித்தராமையாவிடம் கேட்காமலேயே சோனியாவும், ராகுலும் சேர்ந்து குமாரசாமியை முதலமைச்சராக அறிவித்து விட்டனர். அது அவர்கள் செய்த தவறு. அதனால்தான், இப்போது குமாரசாமி ஆட்சி கவிழ்க்கப்பட்டு விட்டது’’ என்று அவர் கூறினார்.இதற்கு சித்தராமையா ஆவேசமாக பதிலடி கொடுத்தார். ‘‘குமாரசாமி ஆட்சியை கவிழ்ந்து விடாமல் இத்தனை நாள் பாதுகாத்ததே நான்தான். நாட்டில் மதவாத சக்திகள் ஆட்டிப்படைக்கின்றன. ஜனநாயகம், மதச்சார்பின்மை, அரசியல் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய அவசரத் தேவை இருந்ததால்தான், குமாரசாமியை முதல்வராக்க நான் ஒப்புக் கொண்டேன்.

தேவகவுடாவும், அவரது மகன்கள் குமாரசாமி, ரேவண்ணா ஆகியோரே ஆட்சி கவிழ்ந்ததற்கு காரணம். அவர்கள் தங்கள் குடும்பத்தினரைத் தவிர வேறு யாரையுமே வளர விட மாட்டார்கள். அவர்களின் குடும்ப ஆதிக்கத்தை விரும்பாமல்தான் மக்கள் தேவகவுடாவையும், அவரது பேரனையும் தோற்கடித்து விட்டார்கள். இனிமேலும் காங்கிரஸ் - மஜத கூட்டணி தொடர வேண்டுமா என்பதை காங்கிரஸ் தலைமை முடிவு செய்ய வேண்டும். எனது கருத்தை நான் தலைமையிடம் தெரிவித்து விட்டேன்’’ என்று சித்தராமையா கூறியுள்ளார்.

இதனால், கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் உறவில் நாளுக்கு நாள் விரிசல் அதிகரித்து வருகிறது. இரு கட்சியினருமே மாறி, மாறி தாக்கி வருவதால், விரைவில் கூட்டணி உடைந்து விடும் என்று தெரிகிறது. இந்த கூட்டணி உடைந்து விட்டால், தனது ஆட்சிக்கு எவ்வித ஆபத்தும் வராது என்பதால், முதலமைச்சர் எடியூரப்பாவும், பாஜகவினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் எடியூரப்பா அமைச்சரவை விஸ்தரிப்பு ; 17 பேர் பதவியேற்பு

More News >>