ஆன்டிகுவா டெஸ்ட் : கோஹ்லி, ரஹானே அபாரம் வலுவான நிலையில் இந்தியா

ஆன்டிகுவாவில் நடைபெற்று வரும் மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது இன்னிங்சில் கோஹ்லி, ரஹானே இருவரும் அரைசதம் விளாசி அவுட்டாகாமல் உள்ள நிலையில் 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 185 Jன்கள் எடுத்து மொத்தம் 260 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 297 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் அணி, 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்திருந்தது. ஹோல்டர் (10), கம்மின்ஸ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நேற்று 3-ம் நாள் ஆட்டத்தில் இருவரும் மிகப் பொறுமையாக ஆடினர். இருவரும் 41 ரன் பார்ட்னர்ஷிப் சேர்த்த நிலையில் ஹோல்டர் (39), கம்மின்ஸ் (0) அவுட்டாக 222 ரன்களுக்கு மே.இ.தீவுகள் ஆல் அவுட்டானது.45 பந்துகளை சந்தித்த கம்மின்ஸ் ஒரு ரன் கூட எடுக்காமல் மோசமான ஒரு சாதனையை இந்தப் போட்டியில் படைத்தார். இந்தியத் தரப்பில் இஷாந்த் (5), ஜடேஷா, ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனால் முதல் இன்னிங்சில் மே.இ.தீவுகளை விட 75 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை ஆடியது. ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஜோடி சுமாரான தொடக்கம் கொடுத்தனர். அகர்வால் 16 ரன்களில் வெளியேறினார். அடுத்து புஜாரா (25), ராகுல் (38) நடையைக் கட்ட 81 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இந்தியா தடுமாறியது. இந்நிலையில் ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் கோஹ்லி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஆட்டத்தின் போக்கை மாற்றினர். இதனால் 3-ம் நாள் ஆட்ட நேரம் முடியும் வரை இருவரும் அவுட்டாகாமல் அரைசதம் கடந்ததுடன் 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தனர். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 53 ரன்களுடனும், கோஹ்லி 51 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

முதல் இன்னிங்சில் 75 ரன்கள் கூடுதலாக பெற்றுள்ள நிலையில் இந்தியா 260 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது. இன்று 4-வது நாளில், ரஹானே- கோஹ்லி அதிரடி காட்டும் பட்சத்தில் இந்தியா இமாலய இலக்கை மே.இ.தீவுகளுக்கு நிர்ணயிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் இந்தியாவின் வெற்றி வாய்ப்பும் பிரகாசமாகும் என்பதும் நிச்சயம்.

More News >>