உடல் பருமன், நீரிழிவு குறைபாடுகளை தடுக்கும் பிரெளன் ஃபேட்

'அடிபோஸ் திசு', பழுப்பு கொழுப்பு அல்லது பிரௌன் ஃபேட் என்றும் அழைக்கப்படுகிறது. மனிதர்களின் கழுத்து, கழுத்துப்பட்டை எலும்பு, சிறுநீரகங்கள் மற்றும் முதுகெலும்பு ஆகியவற்றில் காணப்படும் அடிபோஸ் திசுவுக்கு, உடல் பருமன் மற்றும் நீரிழிவு ஆகியவற்றை தடுக்கும் பண்பு உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நியூ பிரன்ஸ்விக் என்ற இடத்திலுள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், உடலில் வெப்பத்தை உருவாக்கக்கூடிய பழுப்பு கொழுப்பு பற்றிய இந்த கண்டுபிடிப்பு, உடல் பருமன் மற்றும் இன்சுலின் சுரப்பு குறைவதால் ஏற்படும் இரண்டாம் வகை நீரிழிவுக்கான புதிய வகை மருந்துகளை தயாரிப்பதில் உதவும் என்று தெரிவித்துள்ளனர்.சூழ்நிலை குளிராக மாறும்போது, பழுப்பு கொழுப்பு நம் இரத்தத்திலுள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பு இவற்றை பயன்படுத்தி உடலில் வெப்பத்தை உண்டாக்குகிறது. மேலும் இரத்தத்திலுள்ள கிளைத்த சங்கிலி அமினோ அமிலங்களை (branched-chain amino acids - BCAAs) வடிகட்டி நீக்கவும் உதவுகிறது.கிளைத்த சங்கிலி அமினோ அமிலங்கள், இரத்தத்தில் இயல்பு நிலையில் காணப்படுவது உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாகும். ஆனால், இவற்றின் அளவு கூடினால் நீரிழிவு மற்றும் உடல் பருமனை உருவாக வாய்ப்புள்ளது.லூஸின், ஐசோலூஸின் மற்றும் வாலின் போன்ற இவ்வகை அமினோ அமிலங்கள் முட்டை, கால் நடைகளின் இறைச்சி, மீன், கோழியிறைச்சி மற்றும் பால் ஆகியவற்றில் காணப்படுகின்றன. தடகள வீரர்கள் மற்றும் உடல்கட்டு வீரர்கள் இவ்வகை அமினோ அமிலங்களை கொண்ட துணை உணவுகளையும் உண்கின்றனர்.செல்லின் ஆற்றல் மையமான மைட்டோகாண்டிரியாவில் கிளைத்த சங்கிலி அமினோ அமிலங்கள் எப்படி நுழைகின்றன என்ற இருபது வருட கேள்விக்கு இந்த ஆராய்ச்சி பதில் கொடுத்துள்ளது. இரத்தத்திலுள்ள அமினோ அமிலங்களை வெளியேற்றி ஆற்றல் மற்றும் வெப்பத்தை உருவாக்கும் பழுப்பு கொழுப்பின் வேகத்தை கட்டுப்படுத்தக்கூடிய SLC25A44 என்ற நவீன புரதத்தையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.குறைந்த அளவு பழுப்பு கொழுப்பு கொண்டிருப்பவர்கள் அல்லது பழுப்பு கொழுப்பே இல்லாதவர்களின் உடலுக்கு இரத்தத்தில் இருந்து கிளைத்த சங்கிலி அமினோ அமிலங்களை வெளியேற்றக்கூடிய ஆற்றல் குறைவாக இருப்பதால் அவர்களுக்கு உடல் பருமன் மற்றும் நீரிழிவு குறைபாடுகள் உருவாகிறது என்பதையும் இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

More News >>