வங்கியில் ரூ.11ஆயிரம் கோடி சுருட்டிய நீரவ் மோடி எஸ்கேப்

பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ. 11 ஆயிரத்து 360 கோடி அள விற்கு பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி, வெளிநாட்டுக்குத் தப்பியுள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பைக் கிளையில் மொத்தம் ரூ. 11 ஆயிரத்து 360 கோடிகள் அளவில் மோசடியாகவும், அதிகாரமற்ற முறையிலும் மோசடி நடந்து உள்ளது என வங்கியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரியான நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாயை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக தெரியவந்துள்ளது.

வைர வியாபாரியான இவர் உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் தனது நகை ஷோரூம்களை வைத்துள்ளார். முறையான தகவல்களை அளிக்காமல் 280 கோடி ரூபாய் முறைகேடாக கடன் பெற்றதாக கூறி ஏற்கெனவே அவர் மீது கடந்த ஜனவரி 29-ஆம் தேதி பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 29-ஆம் தேதி முறையான தகவல்களை அளிக்காமல் 280 கோடி ரூபாயை நீரவ் மோடி முறைகேடாக பெற்றதாக கூறி, சிபிஐ-யிடம் புகார் அளித்த பஞ்சாப் நேசனல் வங்கி, இந்த மோசடிக்கு துணைபோனதாக தனது வங்கி ஊழியர்கள் 10 பேரை, பணி இடை நீக்கமும் செய்தது.

இதனிடையே, வங்கி அளித்த புகாரின் பேரில், நீரவ் மோடி மற்றும் அவரது மனைவி அமி, அண்ணன் நிஷால், மாமா மேகுல் சோக்‌ஷி மற்றும் வங்கி அதிகாரிகள் கோகுல்நாத் ஷெட்டி, கிளார்காக பணிபுரிந்த மனோஜ் கரத் உள்ளிட்டவர்கள் மீது மோசடி வழக்கு மற்றும் பிற ஊழல் சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

ஜனவரி 31-ஆம் தேதி நீரவ் மோடி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை ஒன்றையும் நடத்துகின்றனர். எனினும் நீரவ் மோடி உட்பட யாரும் கைது செய்யப்படவில்லை.

இன்னொரு புறத்தில், நீரவ் மோடியின் மோசடி குறித்து தீவிர ஆய்வில் இறங்கிய பஞ்சாப் நேச னல் வங்கி, தாங்கள் சுமார் 11 ஆயிரத்து 400 கோடி ரூபாயை நீரவ் மோடியிடம் இழந்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறது.

அதன் பின்னர்தான், நீரவ் மோடி ரூ. 11 ஆயிரத்து 360 கோடி அளவிற்கு மோசடி செய்துவிட்டதாக மத்திய புலனாய்வுக் கழகத்திடம் (சிபிஐ), புதனன்று அவசர அவசரமாக இரண்டு புகார்களை பஞ்சாப் நேசனல் வங்கி அளிக்கிறது.

அதைத் தொடர்ந்துதான், வியாழக்கிழமையன்று அமலாக்கத் துறையினர் நீரவ் மோடியின் குர்லா பகுதியில் அமைந்த இல்லம், காலாகோடா பகுதியில் அமைந்த அவரது நகை கடை, பந்திரா மற்றும் லோயர்பேரல் பகுதிகளில் அமைந்த 3 நிறுவனங்கள், குஜராத்தில் சூரத் நகரில் 3 இடங்கள் மற்றும் தில்லியில் சாணக்யபுரி மற்றும் டிபென்ஸ்காலனி பகுதிகளில் அமைந்த ஷோரூம்கள் என 10 இடங்களில் சோதனை நடத்தினர்.

மும்பையில் உள்ள நீரவ் மோடியை வீட்டுக்கு சீலும் வைத்தனர். நீரவ் மோடியை கைது செய்யும் முயற்சியிலும் இறங்கினர். அப்போதுதான், நீரவ் மோடி தற்போது இந்தியாவிலேயே இல்லை. அவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாகவே சுவிட்சர்லாந்து நாட்டிற்கு தப்பியோடிவிட்ட தகவல் கிடைத்துள்ளது.

More News >>